பணத்தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை ஒழித்தல் ஆகிய விடயங்களில் பன்னாட்டு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கக்கூடிய இரு ஒப்பந்தங்களில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கைச்சாத்திட்டுள்ளார்.
கனடாவின் வன்குவர் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற பணத்தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமத்தின் இவ்வாண்டுக்கான கூட்டத்தொடரில் பணத்தூயதாக்கல் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தலை ஒழித்தல் தொடர்பான தேசிய ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கலந்துகொண்டார்.
கனேடிய நிதித்திணைக்கள இணை உதவி நிதியமைச்சர் ஜுலியன் பிராஸியோ மற்றும் அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸின் பிரதி ஆணையாளர் இயன் மெக்கார்ட்னி ஆகியோரின் தலைமையில் ஆசிய பசுபிக் குழுமத்தின் 42 உறுப்புநாடுகள், கண்காணிப்புக் கட்டமைப்புக்கள், தனியார்துறை நிறுவனங்கள் என்பன உள்ளடங்கலாக பல்வேறு கட்டமைப்புக்களைச் சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தொடரில் பணத்தூயதாக்கல், பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுத உற்பத்தி போன்றவற்றுக்கு நிதியளித்தல் உள்ளிட்ட தீவிர நிதியியல் குற்றங்களை முறியடித்தல் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அதுமாத்திரமன்றி இலங்கையின் நிதியியல் உளவுப்பிரிவு மற்றும் திமோர் லெஸ்டி, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் நிதியியல் உளவுப்பிரிவு ஆகியவற்றுக்கு இடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இவ்வொப்பந்தங்களின் பிரகாரம் மேற்கூறப்பட்ட சவால்களை உரியவாறு கையாள்வதற்கு அவசியமான பன்னாட்டு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும் இம்மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினருடனும் இருதரப்புக் கலந்துரையாடல்களை முன்னெடுத்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, பணத்தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை ஒழித்தல் ஆகியவற்றில் பல்தரப்பு தொழில்நுட்ப மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்தார்.