நாடு இன நல்லிணக்கத்துடன் முன்னுக்கு செல்வதாக இருந்தால் இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து 13ஆம் திருத்தத்தை செயற்படுத்த முன்வரவேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்தார்.
அரசியலமப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் பேசப்பட்டுவருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு முன்னுக்கு செல்லவேண்டுமானால் இன,மத, பேதங்களை மறந்துவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை செயற்படுத்த வேண்டு்ம்.
13ஆம் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வுக்கு இந்தியாவை பின்பற்றி செயற்பட வேண்டு. ஏனெனில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேமாதிரியாக அதிகாரம் வழங்கப்படவில்லை.
இந்தியாவில் ஒருசில மாநிலங்களுக்கு அதிகளவிலான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.சில மாநிலங்களுக்கு குறைவான அதிகாரமே வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் அதிகார பகிர்வின்போது ஒரேமாதிரி அது இடம்பெறுவதில்லை என்பது தெளிவாகிறது.
அத்துடன் தேவையெனில் வடக்கிட்கு சில வருடங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து, எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என எமங்களுக்கு பார்த்துக்கொள்ளவும் முடியும்.
அங்கு வேலைத்திட்டங்களை சிறந்த முறையில் இடம்பெறுவதாக இருந்தால், ஏனையவர்களுக்கும் அவ்வாறே அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முடியும். சில விடயங்களில் எமது பக்கத்தில் இருந்தும் இலகுவான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டி ஏற்படுகிறது.
அதனால் இது தொடர்பில் நாங்கள் புதிய முறையில் பார்க்க வேண்டும். தற்போது இருக்கும் நிலையை அடிப்படையாகக்கொண்டு மிகவும் புதிய முறையில் பார்க்கவேண்டும்.
நாங்கள் பார்க்கும் புதிய முறைமை நாட்டுக்கு நல்லதாக அமைந்தால் சிறுபான்மை சமூகத்துக்கும் நல்லதாக அமைந்தால் இந்தியா உட்பட ஏனைய நாடுகள் எமது விடயத்தில் தலையிட வரப்போவதில்லை என்றார்.
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாகும். இந்த திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் உட்பட பல அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் எதிர்ப்பு காரணமாக 13ஆம் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசி்ங்க தலைமையில் புதன்கிழமை (26) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின்போது இந்த விடயம் மீண்டும் பேசப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தற்போது 13ஆம் திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பாக ஆராய 3பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது.