இன்று கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலும் பேரணியும்

144 0

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி நீதி கோரியும் சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது இந்த பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு கிழக்கில் பல அரசியல் கட்சிகள் ,பல பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை (28) வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த  ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்கவேண்டும்  வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பதுடன் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆதரவு தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சி இலங்கையில் மனிதப் புதைகுழிகள் நீதிகோரிய ஹர்த்தாலுக்கு  ஆதரவு வழங்குகிறோம்.

2023 ஜீலைத் திங்கள் இலங்கையில் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் தமிழின படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் நிறைவு பெற்றும் தமிழினத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்பது உலகறிந்த வரலாறாகும்.

தமிழின அழிப்பிற்கு ஆளாகிய தமிழின மக்களின் இக்காலம் துக்க காலமாகும். தங்கள் தேசத்துக்கு தமிழ் மக்களுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட தாய்க்குலம் தமிழ் மக்கள் ஆராத் துயருடன் கண்ணீரும் கம்பலையுமாய் துக்கநாளாக அறிவித்துள்ளமையை நாமெல்லாம் ஆதரித்து ஹர்த்தாலாக கடைப்பிடிக்கின்றோம்.

தமிழர் மனிதகுலம் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை இலங்கையில் கறைபடிந்த வரலாறாயினும் அந்த ஆத்மாக்களுக்கு ஆறுதலும் வருங்கால தமிழனத்திற்கு நீதியும் விடுதலையும் கிடைக்க வேண்டி நடைபெறும் கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் ஆதரித்து கடைப்பிடிக்க வேண்டியது பெரும் கடப்பாடாகும் என அழைப்பு விடுக்கின்றோம் என்றுள்ளது.

இதேவேளை தமிழ்தேசிய மக்கள் முன்னணி ,யாழ் பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் ,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பு  ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

மேலும் வர்த்தகர்கள் மற்றும் சந்தை வியாபாரிகளும் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை கடந்த மாதம் 29ஆம் திகதி முல்லைத் தீவு, கொக்குத்தொடுவாயில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபை மேற்கொண்ட குழாய் பொருத்துவதற்கான அகழ்வு நடவடிக்கைகளில் மனித எலும்பு எச்சங்களும், ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதையடுத்து நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த 6ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வு நடவடிக்கைகளில் 13 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த அகழ்வு நடவடிக்கையைத் தொடர்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.