காணாமல்போனோர் அலுவலகம் என்ற பெயரில் அமைக்கப்படும் அலுவலகத்தின் ஊடாக இராணுவத்தினரை பழிவாங்கும் முயற்சியில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேநேரம் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைக்கமைய நிறுவப்படவுள்ள யுத்த குற்ற நீதிமன்றத்தின் ஒரு அங்கமாகவே இந்த காணாமல் போனோர் குறித்த அலுவலகம் செயற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலத்தை நல்லாட்சி அரசாங்கத்தினர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இந்த அலுவலகம் கடந்த ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது சர்வதேச சக்திகளுடன் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளின் ஆரம்ப கட்டமாகவே திறக்கப்படவுள்ளது.
அதற்கமைய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திலும் எமது இராணுவத்தினரை பழிவாங்கும் வகையிலான சட்டமூலங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை நாட்டு மக்களுக்கு சுட்டிகாட்டிவேண்டிய கட்டாயம் தோன்றியுள்ளது.
அதன் பிரகாரம் காணாமல் போனோர் அலுவலகமானது நீதியை நடைமுறைப்படுத்தும் அல்லது பொறுப்புகூறலுக்கு இணங்கி செயற்படும் ஒரு அலுவலக கட்டமைப்பில் உள்ளடங்கியதாக அமையாது. இந்த அலுவலம் பாராளுமன்றம் ஊடாக ஸதாபிக்கப்படுவதால் அரச நிறுவனங்கள் உள்ளடங்கும் நீதிக்கட்டமைப்பிலிருந்து விடுப்பட்டு சுயாதீனமாக இயங்கும் நிறுவனமாக அமையும்.
இது ஒரு அலுவலகம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதனை விசாரணைசபை என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாகும். இந்த நிறுவனம் சாட்சியாளர்களை அழைத்துவந்து விசாரணை செய்யவும்,சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அழைப்பானை விடுப்பதற்குமான அதிகாரங்களை கொண்டுள்ளது.
அத்துடன் இவர்களுக்கான அதிகாரங்களுக்கமைய பகல் இரவு என்று பாராமல் தான் நினைத்த மாத்திரத்தில் பொலிஸார் அல்லது இராணுவத்தினர் உள்ளிட்ட எவரையும் கைது செய்யவும் அவர்கள் வசமிருக்கும் பொருட்களை கைப்பற்றவும் முடியும். அவ்வாறு இவர்களின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத எவருக்கு எதிராகவும் நீநிச் சேவைகளை அவதூறு செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் பிரகாரம் இந்த அலுவலகத்தில் விசாரணை கடமைகளை முன்னெடுக்கும் 7 பேருக்கும் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பிலான சட்ட ரீதியிலான அறிவு இருப்பது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இங்கு சர்வதேச மட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கமைய நடத்தப்பட்டுவரும் யுத்தகுற்ற நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களே இங்கும் பணியாற்ற முடியும் என்ற காரணி வெளிப்படையாகின்றது.
இந்தச் சட்டமூலத்தின் 21 ஆம் சரத்தின் பிரகாரம் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனதிடத்திலும் இருந்து நிதியை பெற்றுக்கொள்ள முடியும். அலுவலக சேவைகளின் பிரகாரம் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனங்களுடனும் ஒப்ந்தங்கயை செய்துக்கொள்ளும் அதிகாரமும் இந்த அலுவலகத்திற்கு உள்ளது.
இந்த அலுவலகத்தில் பிரதிநிதிகள் தமக்கு கீழான பிரிவுகளை நிறுவி அவர்களுக்கான அதிகாரங்களையும் வழங்கக்கூடியவர்களாக இருப்பர். இந்த நிறுவனத்திற்கான சேவையாளர்களை நியமிப்பதற்கும் பதவி நீக்குவதற்கும் அலுவலகத்தின் தலைமைகளுக்கு மடடுமே அதிகாரங்கள் உள்ளன. குறிப்பாக இங்கு சேவையாற்றும் எவரும் இலங்கையர்களாக இருக்க வேண்டும் என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிறுவனத்தில் இலங்கையில் உள்ளவர்களுக்கும் வெளிநாடுகளில் சென்று குடியேறியிருப்பவர்களுக்கும் முறைபாடுகளையும், சாட்சியங்களையும் வழங்க முடியும். அதேபோல் நாட்டின் முப்படையினரும் இந்த இந்த நிறுவனத்தின் விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டியது மிக அவசியமாகும்.
இந்த சட்டத்தின் 12 இலக்கச் சட்டத்தின் “அ” எனக் குறிப்பிடப்பட்ட சரத்தின் பிரகாரம் எந்த ஒரு தகவலையும், பொருட்களையும் சாட்சியங்களாக பயன்படுத்தும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் அந்த அலுவலகத்தின் சேவைகளில் தகவல் அறியும் சட்டமூலத்தின் தாக்கம் இருக்காது. இந்த அலுவலக பிரதிநிதிகளுக்கு கிடைக்கபெறும் ஆவணங்கள் தொடர்பில் விமர்சிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்ற நீதியரசர் உட்பட எவருக்கும் வழங்கப்படவில்லை எனபதும் முக்கியமாக சுட்டிகாட்டத்தக்கது.
இவ்வாறான காரணங்களுக்கமையாவ காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகம் என்பது யுத்த குற்ற நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக அமையும் என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. அதனால் இந்தச் சட்டமூலத்திற்கு அமைவாக வாக்களிக்கும் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எமது தேசம்,இராணுவம் ஆகியோரை காட்டிக்கொடுத்தமைக்காக மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கட்டாயம் தோன்றும் என்றார்.