நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மாநாட்டின் போது உள்ளாட்சித் தேர்தலை நடாத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடும் பிரதான நோக்கத்துடன் நேற்று இடம்பெற்ற அனைத்துக்கட்சி மாநாடு தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகள் போன்ற முறையான அரசாங்க அதிகாரங்கள் இல்லாமல் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
வடக்கு, கிழக்கு மக்களை ஏமாற்றி ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதி முயற்சித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
“13வது திருத்தம் தொடர்பில் தேவையான முடிவுகளை எடுப்பதற்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி ஏன் தாமதிக்கிறார்? எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.