வவுனியாவில் நாளை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுமா? : சங்கங்களின் நிலைப்பாடு என்ன?

127 0
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை கண்காணிப்பை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இவ் ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தகசங்கம் , முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் , தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் ஆகிய தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தக சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினாவிய போது,

எமக்கு இதுவரை எவரும் கோரிக்கை விடுக்கவில்லை , கோரிக்கை எவையும் கிடைக்கப்பெறாமையினால் எவ்வித தீர்மானமும் நாங்கள் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினாவிய போது,

எமது பேரூந்துகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் சேவைகள் ஈடுபடுத்தப்படாது என்பதுடன் ஏனைய பகுதிகளுக்கான சேவைகள் பேரூந்து உரிமையாளர்களின் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தனர்..

இவ்விடயம் தொடர்பாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினாவிய போது,

மாவட்டத்திலுள்ள ஏனைய சங்கங்களின் நிலைப்பாடே எமது நிலைப்பாடக அமையும் எனவும் இதுவரை எவ்வித முடிவுகளும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட சிகை அலங்கார சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினாவிய போது,

சங்கத்தில் இது தொடர்பில் எவ்வித கூட்டங்களும் இடம்பெறவில்லை என்பதுடன் எமது நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மொத்த மரக்கறி வியாபாரிகள் சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினாவிய போது,

ஹர்த்தாலுக்கு எமக்கு எவரும் கோரிக்கை விடுக்கவில்லை என்பதினால் சங்கத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை எனவே நாளை வழமை போன்று இயங்கும் என தெரிவித்தனர்.