கழிவறைக்குச் சென்ற வயோதிபப் பெண்ணிடம் தங்க சங்கிலியை அபகரித்த இளைஞர் கைது

139 0
வீடொன்றிலிருந்து வெளியே உள்ள  மலசலகூடத்துக்கு சென்றுகொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு, அவரை கீழே தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடிய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை (26) மாலை மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைதான இளைஞர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு 8ஆம் பிரிவிலுள்ள வயோதிபப் பெண்ணொருவர் தனது வீட்டின் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று மாலை 4.30 மணியளவில் சென்று வீடு திரும்பியிருந்தனர்.

அதன் பின்னர், வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள  மலசலகூடம் நோக்கி அவசரமாக சென்றுகொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் பெண்ணின் கழுத்திலிருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு, அவரை கீழே தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கெமரா மூலம் நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டனர்.

அந்த இளைஞர் பெண்ணின் வீட்டில் இருந்து 4வது வீட்டில் வசிக்கும் 24 வயதுடையவர் என்பது தெரியவர, அவ்விளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

அத்தோடு, திருடப்பட்ட பெண்ணின் தங்க சங்கிலியை சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைதான நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.