விஜே டயஸ், சோசலிச சமத்துவக் கட்சியினதும் (இலங்கை), அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் (RCL) பொதுச் செயலாளராக, 1987 டிசம்பர் முதல் 2022 மே வரை பொறுப்பில் இருந்தார். அதை அடுத்து அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விஜே தனது 81 வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 2022 ஜூலை 27 அன்று காலை கொழும்பில் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் இலங்கையிலும் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் ஒரு சிறந்த ஆழுமையுள்ள மனிதராக இருந்தார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) கடந்த ஆண்டு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது போல்: “விஜே, நிரந்தரப் புரட்சிக்கான சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத கதாநாயகனும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்கான போராளியும் ஆவார். மார்க்சிச மற்றும் ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளை பாதுகாப்பதில் அவர் தளர்ந்துவிடவில்லை. ஏனெனில். அந்தக் கொள்கைகள் கைவிடப்பட்டமை மற்றும் காட்டிக்கொடுக்கப்பட்டமையின் பெறுபேறாக, அரசியல் திசைதிருப்பல், பிற்போக்கு மற்றும் துன்பகரமான உயிரிழப்புகள் போன்ற பேரழிவு விளைவுகளை அவர் கண்டிருந்தார்.”
விஜேயும், கீர்த்தி பாலசூரியவும், 1964 இல் லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்துகொள்வதற்கு எடுத்த முடிவை எதிர்த்த குறிப்பிடத்தக்க இளைஞர்கள் குழுவின் பாகமாக இருந்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் பொறுப்பை பற்றிய அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வுக்கு பிரதிபலித்த விஜேயும் பாலசூரியவும், குழுவில் உள்ள மற்றவர்களும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை (பு.க.க.) 1968 இல் ஸ்தாபித்தனர். பாலசூரிய அதன் ஸ்தாபக பொதுச் செயலாளராக ஆனார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான, கொழும்பின் இனவாதப் போர் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பினால் தூண்டிவிடப்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், 1987ல் தோழர் கீர்த்தியின் அகால மரணத்தைத் தொடர்ந்து பு.க.க.வை வழிநடத்தும் சவாலை தோழர் விஜே ஏற்றுக்கொண்டார்.
தோழர் கீர்த்தியின் துன்பகரமான இழப்பில் இருந்து மீள்வதற்கும், உக்கிரமான உள்நாட்டுப் போர் மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கும் கிராமப்புற மக்களுக்கும் எதிரான பொலிஸ்-இராணுவ மற்றும் பாசிச வன்முறையின் கடினமான சூழ்நிலையில் சோசலிச அனைத்துலகவாதத்திற்கான போராட்டத்தைத் தொடர்வதற்கு, கட்சி காரியாளர்களை மறுவலுப்படுத்துவதில் விஜே முக்கிய கருவியாக இருந்தார்.
விஜே தனது மரணம் வரை மகத்தான அரசியல் தைரியத்துடனும் உறுதியுடனும் இந்தத் தீர்க்கமான பாத்திரத்தை ஆற்றினார். ஒரு புரட்சிகர சர்வதேசிய நோக்குநிலைக்கான அவரது அசைக்க முடியாததும் சமரசமற்றதுமான போராட்டமும் ஒரு மார்க்சிஸ்ட்-ட்ரொட்ஸ்கிஸ்டாக அவரது நேர்மையும், கட்சியின் ஐக்கியத்தைப் பேணுவதற்கும் அதை முன்னோக்கி வழிநடத்துவதற்கும் கட்சி காரியாளர்களுக்கு பெரும் ஊக்கமளிக்கும் ஊற்றாக இருந்தது.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் தீவிரமடைந்து வருகின்ற மற்றும் உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சியின் தற்போதைய சூழலில், தோழர் விஜேயின் வாழ்க்கையின் அரசியல் பொருத்தத்தையும் அதன் படிப்பினைகளையும் பற்றி கலந்துரையாட இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் மற்றும் முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்துப் போராளிகளையும் வரவேற்கிறோம்.
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், ஏற்பாடு செய்துள்ள நினைவுக் கூட்டம் ஜூலை 29, சனிக்கிழமை, மாலை 3.00 மணிக்கு கொழும்பு- 7 இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.