அமெரிக்காவில் பசியால் வாடும் ஹைதராபாத் மாணவி: மகளை மீட்க அமைச்சருக்கு தாய் கடிதம்

73 0

அமெரிக்காவில் மேற்படிப்புக்கு சென்ற மகள், கடந்த 2 மாதங்களாக பசியால் வாடி தெருவில் சுற்றி திரிவதாகவும் அவரை மீட்டுத் தருமாறும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தாய் கடிதம் எழுதியுள்ளார்.

ஹைதராபாத் மவுலாலி பகுதியை சேர்ந்தவர் சையிதா ஹவாஜ் பாத்திமா. இவரது மகளான சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதி எம்.எஸ். படிக்க 2021 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவிற்கு சென்றார். அங்கிருந்து தினமும் தனது தாயிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். லுலூ கடந்த 2 மாதங்களாக தாயை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் கவலை அடைந்த பாத்திமா, தனக்கு தெரிந்த சிலரிடம் அமெரிக்கா சென்று தனது மகள் குறித்து விவரங்களை அறியுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி, சிகாகோ தெருக்களில் உடைமைகளை இழந்து, பசியோடு, மனநிலை பாதித்தவர் போல் லுலூ சுற்றி திரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பாதுகாப்பாக ஒரு இடத்தில் தங்க வைத்து, அவரது தாய்க்கு தகவல் தெரிவித்தனர். மகளின் உடைமைகளை யாரோ திருடி சென்றுவிட்டதால், அவர் மனநிலை பாதிக்கப்பட்டதை அறிந்து மிகவும் பதறிப்போனார் பாத்திமா. உடனடியாக மகளை ஹைதராபாத்துக்கு கொண்டு வர மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், தெலங்கானா அரசும் இதில் தலையிட்டு மகளை அமெரிக்காவிலிருந்து மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்வருக்கு விண்ணப்பித்துள்ளார்.