அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

80 0

அங்கக வேளண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்க தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நம்மாழ்வார் விருதுக்கு’ நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து வேளாண்துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளி யிட்ட செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் ‘‘அங்கக வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது ரூ.5லட்சம் மற்றும் பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்” என வேளாண் அமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பையடுத்து, இதற்கான நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் விவசாயி, குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மை முறைகளைப் பின்பற்றி சாகுபடி செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 அங்கக வேளாண்மையில் ஈடுபட்டு, முழுநேர அங்கக விவசாயியாக இருத்தல் அவசியம். மேலும், அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுடன் முதல் பரிசாக ரூ.2.50 லட்சத்துடன், ரூ.10 ஆயிரம் மதிப்பு பதக்கமும், 2-ம் பரிசாக, ரூ.1.50 லட்சத்துடன், ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும், 3-ம் பரிசாக, ரூ.1 லட்சத்துடன் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும்.விருதுக்கு, உழவன் செயலிமூலமாகவோ அல்லது www.tnagrisnet.tn.gov.in இணையதளம் மூலமாகவோ, தேவையான விபரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக் கட்டணமாக ரூ.100-ஐ அரசுக் கணக்கில் செலுத்தி, நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.