பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை – தொடக்கவிழாவில் பங்கேற்க தேமுதிகவுக்கு அழைப்பு

80 0

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ராமேசுவரத்தில் நாளை (ஜூலை 28) பாதயாத்திரை தொடங்குகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்குமாறு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அன்புமணி, ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோருக்கு அண்ணாமலை அழைப்புவிடுத்துள்ளார். இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை, தமிழக பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் நேற்று சந்தித்து, பாதயாத்திரையில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

சில தினங்களுக்கு முன்பு தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “தேமுதிக இதுவரை யாருடனும் கூட்டணியில் இல்லை. அதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு வரவில்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில், தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதேபோல், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோருக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது.