பொதுவெளியில் வெடித்த கோஷ்டி மோதல் – திமுக தென்காசி மாவட்ட செயலாளர் நீக்கம்

76 0

 தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த திருநெல்வேலியில் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்தவர் சிவபத்மநாதன். சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பனின் ஆதரவாளர். மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தென்காசி வடக்கு மாவட்டத்தில் கட்சிக்குள் எழுந்த புகார்களால் துரை, செல்லத்துரை ஆகியோர் அடுத்தடுத்து மாற்றப்பட்டு, தற்போது வடக்கு மாவட்டச் செயலாளராக சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா செயல்படுகிறார்.

அதுபோல் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் தொடர்ந்தன. இருப்பினும் தனது செல்வாக்கால் பதவியை தக்கவைத்து வந்தார்.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவுடன் மோதல் போக்கை கடைபிடித்ததாகவும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவபத்மநாதன் போதிய ஒத்துழைப்பு தராததால், ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை தோல்வியடைந்ததாக புகார் கூறப்பட்டது.

பணம் கேட்டு மிரட்டிய புகார்: கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கடையம் ஒன்றியக்குழு தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் இவர் மீது புகார் உண்டு. ஒருபுறம் சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், மாவட்ட திமுக அலுவலகம் கட்ட இடம் வாங்கி, தலைமைக்கு சிவபத்மநாதன் அளித்தார். இதனால் இவரது செல்வாக்கு சற்று உயர்ந்தது.

எனினும், இவரது ஆதரவாளர்கள் கடுமையாக ஆட்டம் போட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இவரது தீவிர ஆதரவாளர் ஒருவர் திமுக பெண் நிர்வாகிகளுக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. ஆனால் அந்த பிரமுகர் மீது மாவட்டச் செயலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவராக இருப்பவர் தமிழ்ச்செல்வி. சிவபத்மநாதன் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்விக்கு எதிராக செயல்பட்டனர். தென்காசியில் திமுக மகளிரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ச்செல்விக்கும் – சிவபத்மநாதனுக்கும் மேடையில் வைத்தே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவின.

இந்நிலையில் சிவபத்மநாதனை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, சுரண்டை நகர திமுக செயலாளர் வே.ஜெயபாலனை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கட்சித் தலைமை நியமித்துஉள்ளது. உள்ளாட்சித் தேர்தலின்போது சுரண்டை நகராட்சி தலைவர் பதவிக்கு இவர் முயற்சி செய்ததாகவும், சிவபத்மநாதனின் எதிர்ப்பால் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாகவும் புகார் உண்டு.