சரியான தகவல்களை வழங்கி ஒத்துழையுங்கள்!

74 0
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சிப் பெறும் திட்டங்களுக்கு அமைய 15 ஆவது குடிசன,வீட்டுவசதிகள் தொகை மதிப்பாய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வீடுகளை நிரற்படுத்தும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும். தொகைமதிப்பீட்டுக்கு நாட்டு மக்கள் அனைவரும் சரியான தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொகைமதிப்பு,புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.அனுரகுமார தெரிவித்தார்.

தொலைமதிப்பு,புள்ளிவிரபத் திணைக்களத்தின் காரியாலயத்தில்  புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அறிவியல் முறைமையிலான குடிசன மதிப்பீடு தெற்காசியாவில் இலங்கையில் முதன்முறையாக 1981 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு ஒருமுறை குடிசன, வீட்டுவசதிகள் தொகை மதிப்பீடு செய்யப்பட்டது.

1981 ஆம் ஆண்டு 12 ஆவது குடிசன,வீட்டுவசதிகள் தொகை மதிப்பீடு செய்யப்பட்டது. 1991 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்படவில்லை. 2001 ஆம் ஆண்டு 18 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் மதிப்பீடு செய்யப்பட்டன. 2014 ஆம் ஆண்டு 30 ஆண்டுகளுக்கு பின்னர் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகை மதிப்பீடு செய்யப்பட்டது.

15 ஆவது குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பை 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் கொவிட் பெருந்தொற்று தாக்கம் அதை தொடர்ந்து பொருளாதார பாதிப்பு ஆகிய காரணிகளால் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக குடிசன மற்றும் வீட்டுவசதிகளை தொகை மதிப்பீடு செய்யும் முயற்சி தோல்வியடைந்தது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இருந்து மீள்வதற்கும், சுகாதாரம், கல்வி, சமூக நலன்புரித் திட்டம், ஆள்புல ஒருமைப்பாடு தேசிய பாதுகாப்பு ஆகிய காரணிகளில் குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பீடு அத்தியாவசியமானது. இதனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘தொகை மதிப்புக் கட்டளைச் சட்டம் (143) ஆம் அத்தியாயத்துக்கு அமைய 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்புக்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை கடந்த 12 (   ஜூலை  ) ஆம் திகதி வெளியிட்டார்.

இதற்கமைய முதல் கட்டமாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் கட்டிடங்களை நிர்ற்படுத்தும் அதாவது வீட்டு வசதிகளை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பமாகும்.

அச்சு பதிவுகளுக்கு பதிலாக இம்முறை தொழில்நுட்ப வசதிகளை கொண்டு தரவுகள் சேகரிக்கப்படும். தரவு கோரல் சேவையில் 22,000 சேவையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இவர்களுக்கு விசேட பயிற்சி தற்போது மாவட்ட மட்டத்தில் வழங்கப்படுகிறது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான திட்டமிடலில் ஒரு அங்கமாகவே குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு காணப்படுகிறது. ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகை மதிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சரியான தகவல்களை வழங்க வேண்டும் என்றார்.