கறுப்பு ஜூலை கலவரங்களில் உயிரிழந்தோரை நினைவுகூருவோருக்கு எதிரான அடக்குமுறைகள் : சட்டத்தரணி அம்பிகா கடும் விசனம்

116 0

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி விரும்பும் அதேவேளை, மறுபுறம் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவோருக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘கறுப்பு ஜூலை’ கலவரங்கள் இடம்பெற்று இவ்வருடத்துடன் 40 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அக்கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வும், கவனயீர்ப்புப்போராட்டமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இருப்பினும் இடைநடுவே வருகைதந்த பிறிதொரு குழு இப்போராட்டத்தில் குழப்பம் விளைவித்ததுடன், அக்குழுவில் சிலர் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்த அனைவரும் தீவிரவாதிகளே என்றவாறான கருத்தையும் முன்வைத்தனர். அப்பகுதியில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்த போதிலும், நினைவுகூரல் நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அவர்கள் முற்படாமல் இருந்தமையினை காணொளிகள் வாயிலாக அவதானிக்கமுடிந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவங்கள் அடங்கிய காணொளியொன்றை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், ‘கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவோருக்கு எதிராகப் பொலிஸார் படைப்பலத்தைப் பிரயோகிப்பதுடன், அவர்களை அச்சுறுத்துவதற்குக் குண்டர்களுக்கு இடமளிக்கும் அதேவேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க விரும்புகின்றார்கள்’ என்று விசனம் வெளியிட்டுள்ளார்.

‘இவ்விடயத்தில் நீங்கள் உண்மையான தன்முனைப்புடன் செயற்படவில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றீர்கள். அதேபோன்று சர்வதேச சமூகத்திடமிருந்து தப்புவதற்கும், பொறுப்புக்கூறல் முயற்சிகளிலிருந்து விடுபடுவதற்குமான உத்தியே இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பதும் நிரூபணமாகியுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.