ஜனநாயகம், சமூக நீதியைக் காப்பாற்ற பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

82 0

திருச்சி ராம்ஜி நகரில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடந்தது. பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். மாலையில் கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு வந்தார்.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.வுக்கும், திருச்சிக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. திருச்சி கழகத்தின் கோட்டை மட்டுமல்ல. கழகத்தின் தீரர்கள் கோட்டம் தான் இந்த திருச்சி. திருச்சியில் நடந்த மாநாடுகள் திருப்பு முனை மாநாடுகளாக அமைந்தது. திராவிட மாடல் ஆட்சி குறித்தும், தேர்தல் பணி விதிமுறைகள் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவற்றை மனதில் வைத்து செயல்பட வேண்டும். கழகம் தொடங்கி 75-வது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க உள்ளோம். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1 கோடி உறுப்பினர்களைச் சேர்த்துள்ளோம்.

இந்நிலையில் தான் பாராளுமன்ற தேர்தலை நாம் எதிர்நோக்கி உள்ளோம். பாராளுமன்ற வெற்றிக்கும் நீங்கள் தான் பொறுப்பாளர்கள். நாளை நமதே, நாற்பதும் நமதே என உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் முழங்கினேன். கலைஞர் கூறியதைபோல வெற்றி ஒன்று தான் இலக்காக அமைய வேண்டும். வெற்றி அடைவதற்கான வழிமுறைகளில் மிகச்சரியாக நடைபோட வேண்டும். வாக்குச்சாவடி விவரம் சரியாக உள்ளதா?.

போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்களா?. இறந்தவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா? ஆகியவற்றை முழுமையாக சரிபார்ப்பது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் முதல் பணி. என்னைப் பொறுத்தவரை நம்மை நிராகரிக்கக்கூடியவர்களே இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அனைவருக்கும் பொதுவான ஆட்சியை, எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்துகிறோம். எங்களுக்குள் குறைகள், பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் ஆட்சியில் எவராலும் குறைகளை கண்டுபிடிக்க முடியாது.

தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கி கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி தரக்கூடாது. நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ கவர்னர் நமக்கு பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார். ஆக அவரை மாற்ற வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை. தேர்தல் வரை அவர் இருக்க வேண்டும். இன்னும் வாக்குகள் நமக்கு அதிகரிக்கும். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை காட்டிலும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் முக்கியம். முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நமது அணி வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ.க. சிதைத்து விட்டது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது. பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால், இந்தியாவை, சமூகநீதி, அரசியல் அமைப்பு சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது. ஏன் தமிழ்நாடு என்ற மாநிலமோ, அதற்கான சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களோ இருக்கமாட்டார்கள். அத்தனையையும் காலி செய்துவிடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது.

இதுதான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும். பல்வேறு தேச மொழியைப் பேசுபவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட கட்சி தான் பா.ஜ.க. அந்த ஒற்றை கட்சி தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஒற்றை கட்சி அமைந்தால் ஒரே ஆள் கையில் அதிகாரம் போய்விடும். அதனால் தான் இந்த தேர்தலில் பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும். இதற்காகவே 26 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம்.

26 கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டி உள்ளோம். இந்தியாவை காப்பாற்ற போவது இந்தியா கூட்டணி தான். இதை பிரதமர் மோடியால் தாங்கி கொள்ள முடியவில்லை. பா.ஜ.க.வை எதிர்க்க வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்து ஏதேதோ பேசுகின்றனர். தி.மு.க.வை வாரிசுகளுக்கான கட்சி என பிரதமர் கூறுகிறார். இதைக்கேட்டு, கேட்டு புளிச்சுப்போச்சு. வேறு ஏதாவது கண்டுபிடித்து சொல்லுங்க. நான் சொல்கிறேன் இது வாரிசுகளுக்கான கட்சி தான். ஆரியத்தை வீழ்த்தும் திராவிடத்தின் வாரிசு நாங்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வாரிசுகள் நாங்கள். இதை தைரியமாக பெருமையோடு என்னால் சொல்ல முடியும். பா.ஜ.க. யாருடைய வாரிசு? கோட்சேவின் வாரிசுகள் தான் நீங்கள். உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா?. அப்படி சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா? மே மாதம் தொடங்கிய வன்முறையை இன்று வரை மணிப்பூரை ஆளும் பா.ஜ.க.வால் தடுக்க முடியவில்லை. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசாலும் தடுக்க முடியவில்லை.

வன்முறையாளர்களும், மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் மணிப்பூர் போலீசும் கைகோர்த்து கொண்டு மக்களை தாக்கி கொண்டு இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை. பா.ஜ.க.வை ஆளும் மணிப்பூர் எம்.எல்.ஏ. பாவோலியன்லால் ஹாக்கி சொல்லியிருக்கிறார். ஒற்றுமையாக இருக்கக்கூடிய மக்களை வேற்றுமைப்படுத்தி அவர்களின் மனதில் மனக்கசப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வு தான் இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது. அ.தி.மு.க. பெயரில் இயங்கும் கொத்தடிமை கூட்டத்தில் யாராவது மணிப்பூர் பற்றி பேசினார்களா?

வாய்க்கு வந்ததை பேசுகிறாரே எடப்பாடி பழனிசாமி, அவர் மணிப்பூரை ஆளும் முதலமைச்சரை பற்றியோ, மத்திய பா.ஜ.க. அரசையோ கண்டித்தாரா?. எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்து கொண்டு ஊழல் குறித்து பிரதமர் பேசுகிறார். உரிமைகளைக் கைவிட்டவர்களும், காவு வாங்கியவர்களும் இன்று கைக்கோர்த்து வருகிறார்கள். இவர்களை இந்த தேர்தலில் நாம் முழுமையாக வீழ்த்தியாக வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களையும் மணிப்பூராக்கி விடாமல் தடுக்க வேண்டும். தமிழை, தமிழ்நாட்டை, தமிழ் மக்களை காக்க வேண்டுமானால் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும்.

நமக்கு முன்னால் உள்ள கடமை என்பது மிகப்பெரியது. ஜனநாயக போர்க்களத்தில் முன்னணி படைவீரர்கள் நீங்கள். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் போர்ப்படை தளபதிகள் நீங்கள். உங்களை நம்பி நாடாளுமன்ற தேர்தல் களத்தை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். என் கடமையின் தூதுவர்களாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்கப்போவது நீங்கள், பணியாற்றப்போவது நீங்கள், உங்களின் ஒருவனானநான் உங்களை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளேன். களம் காணுங்கள். கழகத்தின் வெற்றிக்காக களமாடுங்கள் என தெரிவித்தார்.