13ஆவது திருத்தத்தை பலப்படுத்த மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்

69 0

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளன. ஜனாதிபதியின் நோக்கமும் இதுவாகவே இருந்தது.

13ஆவது திருத்தத்தை பலப்படுத்த வேண்டுமாயின், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

நாவல பகுதியில் புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டபோது இணக்கமாக செயற்பட்ட எதிர்க்கட்சிகள் தற்போது பிளவுபட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக ஜனாதிபதி ரணில் எடுத்த சகல முயற்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளன. 13ஆவது திருத்தம் தொடர்பில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியாத நிலை காணப்படுகின்றமை ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தும்.

13ஆவது திருத்தத்தின் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக அமுல்படுத்தினால் வடக்கு பொலிஸ் பிரிவுக்கும், இராணுவத்துக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது அடிப்படையற்றது. 13ஆவது திருத்தத்துக்கும் இராணுவத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

13ஆவது திருத்த விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மை நோக்கத்துடன் செயற்படவில்லை. ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு செயற்படுகிறார்.

13ஆவது திருத்தத்தை பலப்படுத்த வேண்டுமாயின், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது பயனற்றது.

மாகாண சபைத் தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்புக்கூற வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.

ஆகவே, பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து விசேட அவதானம் செலுத்தி மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தலாம் என்றார்.