பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், வடக்கில் பொது மக்களின் காணிகளை விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் இயல்புவாழ்க்கையை உறுதிசெய்தல், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையினை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் இணைஅனுசரணையுடன் கடந்த வருடம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் அல்லது சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின்20 ஆவது அமர்வு நேற்று முன்தினம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகிஸ்வர மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார செயற்பாட்டு சேவையின் ஆசிய பசுபிக்கின் முகாமைத்துவ பணிப்பாளர் குன்னர் வீகான்ட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பில் வெ ளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த அமர்வானது மிகவும் பயன்னுள்ள வகையில் அமைந்திருந்தது.
இதன்போது அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது அனுதாபத்தை தெரிவித்திருந்தது. அதேபோன்று இந்த அனர்த்தத்தின்போது இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 114.5 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியமை தொடர்பில் இலங்கையின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடையினை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதுடன் அதனை ஆணைக்குழுவானது வரவேற்றது. மீன்பிடித்துறையில் இலங்கை சர்வதேச தரத்தினை பின்பற்றியமை மற்றும் மீன்பிடி முகாமைத்துவத்தில் அடைந்த முன்னேற்றம் என்பவற்றினாலேயே இந்த சாதனை அடையப் பெற்றதாக கூட்டு ஆணைக்குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
அத்துடன் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் மீன்பிடித்துறையில் ஒரு சிறந்த முறையான உறவை நீடிக்க வேண்டுமென்றும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டது. இது இவ்வாறிருக்க இம்முறை கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின்போது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பாக இரு தரப்பிலும் ஆராயப்பட்டது. அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், வடக்கில் பொது மக்களின் காணிகளை விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்தல், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையினை உருவாக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் அல்லது அவர்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. இதனிடையே புதிய அரசியலமைப்பு வரைபினை தயாரிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளும் நோக்கில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளமையும் கூட்டு ஆணைக்குழு வரவேற்றது. இலங்கை அரசாங்கம் தமது சர்வதேச அர்ப்பணிப்பை மீள்புதுப்பித்துள்ளதன் காரணமாகவே இவ்வாறு இந்த விண்ணப்பம் வரவேற்க்கப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையினை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பம் ஜூன் மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான முதலீட்டு கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் கூட்டு ஆணைக்குழு இணக்கப்பாட்டிற்கு வந்தது. பாரிய கொழும்பு கழிவுநீர் திட்டத்திற்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி இலங்கைக்கு 820 கோடி ரூபா சலுகை கடனை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அதுமட்டுமன்றி நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் கிராமிய அபிவிருத்திற்கு அப்பாற்பட்டு 2014-2020 ஆண்டுகளுக்கிடையிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 3440 கோடி ரூபா உதவியை வழங்குவது குறித்தும் இந்த கூட்டு ஆணைக்கழு அமர்வின்போது ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பான முக்கியத்துவமான பேச்சவார்த்தைகளை இலங்கை அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்து வரும் மாதங்களில் முன்னெடுப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்குமிடையிலான கூட்டு ஆணைக்குழுவானது பரந்துபட்ட இருதரப்பு உறவுகள், இருதரப்பு பரஸ்பர அக்கறை, அபிவிருத்தி பங்குடமை போன்ற விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்த கூட்டு ஆணைக்குழுவின் கீழ் நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சிப்படுத்தல், மனித உரிமை செயற்குழு, வர்த்தகம் பொருளாதாரம் மற்றும் கூட்டுறவு செயற்குழு மற்றும் அபிவிருத்தி கூட்டுறவு தொடர்பான செயற்குழு ஆகியன இயங்கி வருகின்றன. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 21 ஆவது அமர்வு எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.