பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தொலைபேசி ஆய்வுத் தகவல்களுக்கு அமைய, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பல உத்தியோகத்தர்களை தொட ர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதனை விட ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ள மிக முக்கிய இராணுவ அதிகாரியாக கருதப்படும் உதய நந்தன நாகஹவத்த ஆரச்சி தொடர்பிலும் விசாரணைகள் தொடர்வதாகவும் அவரை பல முறை விசாரணை செய்துள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர்.
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த சில்வா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர விமலசிறி இந்த விடயங்களை நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா, மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்கவுடன் வந்திருந்த விசாரணையாளரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பான பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர விமலசிறி மேலதிக விசாரணை அறிக்கையை நீதிவான் நிஸாந்த பீரிஸிடம் கையளித்தார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது;புதிய சீ.சீ.ரீ.வி. காணொளிகள் தொடர்பில் கடந்த 2016.07.08 அன்று நீதிமன்றில் பெற்றுக் கொண்ட உத்தரவு அன்றைய தினமே பொலிஸ் சீ.சீ.ரி.வி. பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கம்லத்திடம் கையளிக்கப்பட்டது.
அதன்படி அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.பி.ரி.பி. செனவிரத்ன கடந்த 2012.05.16 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் 2012.05.17 அதிகாலை 2.00 மணிவரையிலான சீ.சீ.ரி.வி. காட்சிகளை சமர்ப்பித்துள்ளார்.
கிருலப்பனை ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதியில் பொலிஸ் சீ.சீ.ரீ.வி. பிரிவின் கட்டுப்பாட்டில் பொருத்தப்பட்டுள்ள KIR, 1F, 2F, 3F, மற்றும் 4F ஆகிய கமராக்களில் இருந்தும் நாரஹேன்பிட்டி சந்தியில் பொறுத்தப்பட்டுள்ள NAR, 1F, 2F, 3F, 4F மற்றும் 5F ஆகிய கமராக்களின் பதிவுகளிலும் இருந்த காட்சிகள் இவ்வாறு எமக்கு கடந்த 2016.7.11 அன்று 10 இறுவட்டுக்களாக கிடைத்தன.
இந்நிலையில் முன்னர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் இருந்து நாம் கைப்பற்றிய 4 தெளிவற்ற சீ.சீ.ரீ.வி. சாட்சிகள் அடங்கிய சீ.டி.க்கள், தற்போது கிடைத்துள்ள காணொளிகளை ஆய்வுக்காக கனடாவின் நிறுவனத்துக்கு அனுப்பும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக கடந்த 2016.7.13 அன்று கனடா தூதரகத்திற்கு இந்த சீ.சீ.ரீ.வி. காணொளிகளை ஆய்வுக்கு கொண்டு செல்லும் இரு புலனாய்வு அதிகாரிகளும் அழைக்கப்பட்டு விசா தொடர்பில் நேர்முகப் பரீட்சையும் இடம்பெற்றது. எனினும் இதுவரை விசா கிடைக்கவில்லை. பிரிட்டிஸ் நிறுவனமோ காணொளிகளை 2016.08.15 இற்கு முன்னர் ஆய்வுகளுக்காக சமர்ப்பிக்க கோரியுள்ளது.
இதனைவிட இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்ற போது நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் டேனியல் பெரேராவின் கையடக்கத் தொலைபேசிக்கு உள்வந்த வெளிச் சென்ற அழைப்புக்கள் தொடர்பில் நாம் சூட்சும விசாரணைகளை முன்னெடுக்கிறோம். குறிப்பாக இதனுடன் தொடர்புபட்டதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் நான்கு பொலிஸாரிடம் நாம் விசாரணைகளை செய்துள்ளோம்.
சார்ஜன் தர அதிகாரிகளான வெல்லகே ரஞ்சித் பிரேமலால் சில்வா (14226), மதுர நாயக்க தயாரத்ன (29203), தென்னகோன்லாகே பிரேமகுமார சந்திரதிலக (8129) ஆகியோரிடமும் கான்ஸ்டபிளான பிரதீப் ருவன் குமாரவிடமும் (13871) இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் தீர்மானமிக்க அதிகாரியாக செயற்பட்டு தற்போது ஓய்வுபெற்றுள்ள முக்கிய இராணுவ அதிகாரியான உதய நந்தன நாகஹவத்த தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன. அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்.ஆகவே சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோருகிறோம் என அவ்வறிக்கையில் கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்து கருத்துக்களை முன்வைத்த அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க மேற்படி விடயங்களை மேலோட்டமாக சுட்டிக்காட்டி, சந்தேகநபர்களுக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 32 ஆம் அத்தியாயத்துடன் இணைந்து பேசப்படும் 113, 296 ஆகிய பிரிவுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் பிணை கோரினால் அதனை நிராகரிக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து முதலாவது சந்தேக நபரான சுமித் சம்பிக்க பெரேராவின் சட்டத்தரணி அஜித் பத்திரன தனது கருத்துக்களை முன்வைத்தார்.
”எனது சேவை பெறுநர் தொடர்பில் நான் மேல் நீதிமன்றில் பிணை மனுதாக்கல் செய்துள்ளேன். பொலிஸார் தாக்கல் செய்த முதல் பீ அறிக்கையிலோ அல்லது ஏனைய விசாரணைஅறிக்கையிலோ, எனது சேவை பெறுநர் இந்த விவகாரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
தான் ஏன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளேன் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை எனது சேவை பெறுநருக்கு உள்ளது. அதனால் அதனையேனும் இந்த மன்று வெளிப்படுத்த வேண்டும்.அத்துடன் எனது சேவை பெறுநர் அதீத நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கான வைத்திய சிகிச்சைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.இதனையடுத்து 2 ஆவது சந்தேக நபரான அநுர சேனநாயக்கவும் மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்துள்ளதாக நீதிவானுக்கு அறிவித்தார்.
இந்நிலையில் இலங்கை வைத்திய சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தாஜுதீனின் முதல் பிரேத பரிசோதனை விசாரணைகளை முன்னெடுத்த வைத்தியர் ஆனந்த சமரசேகர அவரது இரு உதவியாளர்களுக்கும் எதிரான விசாரணை தொடர்பில் விளக்கம் கோரப்பட்டது. அந்த விசாரணைகள் வைத்திய சபையின் நியமங்களுக்கு அமைவாக உரிய சட்டவாதிகளின் பிரகாரம் இடம்பெறுவதாக நீதிவானுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து அவ்விசாரணைகளை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கிய நீதிவான் அந்த விசாரணை அறிக்கை மேலதிக விசாரணையில் தாக்கம் செலுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க தனக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்ட நீதிவான் நிசாந்த பீரிஸ் மேல் நீதிமன்றை நாடி பிணை தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்து விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதுரை சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.