தேசிய நல்லிணக்கத்துக்கான செயலணி என்ற பெயரில் எந்த நிறுவனமும் இல்லை. அவ்வாறானதொரு செயலணி நிறுவப்பட்டமை தொடர்பாகவோ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதற்கு தலைமை தாங்குகின்றமை குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அல்லமஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கினாலும் அதற்கு நாங்கள் எதிர்ப்பு வெளியிடப்போவதில்லைஎன்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எம்.பி.யான விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவத்தார்.
விமல் வீரவன்ஸ எம்.பி, தேசிய நல்லிணக்கத்துக்கான செயலணி என்ற நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதா என்றும் அது அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் நிறுவப்பட்டதா என்று கேள்வியெழுப்பினார்.
இக்கேள்விக்கு பதிலளித்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் நிரோஷன் பெரேரா அவ்வாறான நிறுவனமொன்று நிறுவப்படவில்லை என பதிலளித்தார்.
இச்சமயத்தில் விமல் வீரவன்ஸ எம்.பி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையில் அவ்வாறானதொரு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிகாயிருக்கின்றன. தாங்கள் அவ்வாறு நிறுவப்படவில்லை என்று கூறுகின்றீர்களே என்று கேள்வி எழுப்பினார்.
இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகையில்சந்திரிக்கா தலைமையில் அவ்வாறான செயலணியொன்று நிறுவப்பட்டமை பற்றி எனக்குத்தெரியாது. சந்தரிகா உங்களுடைய ( வீரவன்சவின்) பழைய நண்பர். கடந்த காலத்தில் இருவரும் இணைந்து அரசாங்கமொன்றையும் அமைத்துள்ளீர்கள். ஆகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடமே அது பற்றி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அறிந்துக்கொள்ளுங்களேன் என்றார்.
அதன்போது , சந்திரிக்கா குமாரதுங்க எனக்கு பழைய நண்பர். எனினும் உங்களுக்கே(பிரதமருக்கே) எனக் கூறிய விமல் வீரவன்ச எம்.பி ஊடகங்களில் வந்திருந்த செய்தி தொடர்பாகவே நான் கேள்வி எழுப்புகின்றேன் என்றார்.
இதன்போது நீங்கள் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை எதிர்க்கிறீர்களா? சந்திரிக்க குமாரதுங்க அல்லது மஹிந்த ராஜபக்ஷ என யார் தலைமையிலாவது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது நல்ல விடயமே. அதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? நீங்கள் ஒரு காலத்தில் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் வருவதை விரும்பினீர்கள். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வந்ததன் பின்னர் தற்போது அந்த பிரச்சினையும் இல்லாமல் போயுள்ளது என விமல் வீரவன்ஸவைப் பார்த்து பிரதமர் குறிப்பிட்டார்.
அச்சமயத்தில் கடும் தொனியில் விமல் எம்.பி, குறிப்பிடுகையில்மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் தான் நாடு ஒருமைப்படுத்தப்பட்டு உண்மையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. யாழ். பல்கலைக்கழகத்தில் அப்போது சிங்கள மாணவர்கள் தமிழர்களால் தாக்கப்பட்டிருக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்கத்தின் கீழ் தான் அங்கு சிங்கள மாணவர்கள் தாக்கப்படுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எச்சந்தர்ப்பத்திலும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தை கொண்டு வருவதற்கு செயற்பட்டிருக்கவில்லை. நீங்கள் சபையை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ-மூனுடன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும், இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக இருந்த தருஸ்மனுடன் அப்போதைய சட்ட மா அதிபராகவிருந்த மொஹான் பீரிஸ் சென்று பேசியதன் ஊடாகவும் கடந்த அரசாங்கம் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தை கொண்டு வருவதற்கு உடன்பட்டிருந்ததமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு பான் கீ- மூனுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு ஒப்பந்தின் மூலம் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு உடன்பட்டிருந்தீர்கள். சட்ட மா அதிபர் என்ற வகையில் மொஹான் பீரிஸ் தருஸ்மனுடன் என்ன பேசினார் என்று தேடிப்பார்த்தால் அது புரியும். எனினும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு தாமும் செல்ல வேண்டிவரும் என்ற பின்னர் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புன்னகைத்தவாறே தெரிவித்ததோடு நீங்கள் குறிப்பிடும் படியாக எவ்விதமான நிறுவனமும் இல்லை என மீண்டும் தெரிவித்து அமர்ந்தார்.