சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பிலான சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்காக சென்றிருந்த அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் மேற்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதுபான உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அஹங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் அஹங்கம திட்டகலை, வெடகேவத்தை பகுதிக்கு சுற்றிவளைப்புக்காக சென்றிருந்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பின் போது 375 மில்லி லிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது 8 பேர் அடங்கிய குழுவொன்று பொலிஸ் குழுவினரை இடைமறித்து, சந்தேகநபரை விடுவிக்குமாறு வலியுறுத்தி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் பொலிஸார் மீது பொல்லால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் கல்வீச்சு தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கல்வீச்சு காரணமாக பொலிஸ் ஜீப்பின்பின் பக்க கண்ணாடிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொனகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.