1971ல் சிறீமாவோ பண்டாரநாயக்கவுக்கும், 1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கியது போன்று இன்று ரணிலுக்கும் வழங்கி அதனூடாக 13ம் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இந்தியா விரும்பினால் செய்ய முடியும். இதனைவிடுத்து திருகோணமலையை வலுசக்தி மையமாக அமைத்து அதனை தனது நலனுக்குப் பயன்படுத்தவே இந்தியா தமிழர் பிரச்சனையை ஒரு துரும்பாக பயன்படுத்துகிறது என்றால்….. யாரைத்தான் நம்புவது?
இது ஒன்றும் எதிர்பாராத நிகழ்வு அல்ல. நன்கு திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி நிரல். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியாவுக்கான அதிகாரபூர்வ விஜயத்தையே இங்கு குறிப்பிடுகிறேன்.
கடந்த காலங்களில் இலங்கையில் ஆட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுபவர்கள் முதலாவது வெளிநாட்டு விஜயமாக அயல்நாட்டுப் பயணம் அமையும். கூப்பிட்ட குரலுக்கு முதலில் ஓடி வருபவர் அயலவர் என்பதற்கிணங்க இந்திய பயணம் அமைந்து வந்துள்ளது.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி என்ற பதவி வழியாக இந்தியாவுக்குச் செல்ல சரியாக ஒரு வருடம் சென்றுள்ளது. இதற்கான திகதித் தெரிவுதான் இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.
மக்கள் புரட்சியால் மக்களால் தெரிவான ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச கடந்த வருடம் யூலை மாதம் 9ம் திகதி நாட்டை விட்டு தப்பியோட, அவரது கட்சியில் அமைச்சராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருந்திராத ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக யூலை 13ம் திகதி பதவியேற்றார்.
யூலை 20ம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவுக்கான வாக்களிப்பில் 134 எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று 8வது ஜனாதிபதியாக தெரிவாகி, மறுநாளான யூலை 21ம் திகதி அதிகாரபூர்வமாக பதவியேற்றார்.
இது இடம்பெற்று முடிந்த ஒரு வருடத்துக்குள் எத்தனையோ நாடுகளுக்குப் பயணம் செய்த பின்னர் இந்த மாதம் 20ம் திகதி இந்தியா சென்று, 21ம் திகதி பிரதமர் மோடியைச் சந்தித்து பல்வேறு விடயங்களையும் கலந்துரையாடி இரு நாட்டு ஒப்பந்தங்கள் சிலவற்றையும் நிறைவு செய்துள்ளார்.
ஒருவகையில் பார்க்கையில், தமது ஜனாதிபதி பதவியின் முதலாண்டு பூர்த்தியை கொண்டாட இந்திய விஜயமும் மோடியின் சந்திப்பும் முக்கியமென ரணில் விரும்பியிருக்கலாமென கருத இடமுண்டு. இந்த யூலை மாதம் இலங்கை இந்திய விவகாரங்களுடன் நிறைய சம்பந்தப்பட்டது. நல்லதும் கெட்டதும், உறவும் பகையும் என இருவகைப்பட்டதாக இவை அமைந்துள்ளன.
1983 யூலை தமிழின அழிப்பை அடுத்து இந்தியா நேரடியாக இலங்கை விவகாரத்தில் தலையிட நேர்ந்தது. இதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், கறுப்பு யூலையை இனஅழிப்பு என்று சொல்லலாமென சுட்டியிருந்தார்.
1987 யூலை 29ம் திகதி இந்தியப் பிரதமர் ராஜிவும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் தமிழர் நலனுக்கென அதிகார பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்காகவே 13வது அரசியல் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இதே யூலை மாதத்தில் முக்கியமான அந்த நாட்களை ஒட்டிய வாரத்தை இந்திய விஜயத்துக்கு ரணில் தெரிவு செய்ததை தற்செயலானதாக பார்க்க முடியாது. தந்திரோபாய ராஜதந்திர நகர்வுகளுக்கு இந்த பயணத்தை அவர் பயன்படுத்துவதை இதற்கு முந்தைய நாட்களில் அவர் நடத்திய சந்திப்புகளையும் வெளியிட்ட கருத்துகளையும் வைத்துப் பார்க்கலாம்.
தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கு பல காலவரையறைகளை குறிப்பிட்டுக் கூறிய ரணில், அவைகளை நிறைவேற்றாது அவ்வப்போது தமிழர் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தி வந்தார். இறுதியாக இந்தியா பயணிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடத்திய சந்திப்பு எல்லாவற்றிலும் உச்சமானது.
அதிகாரப் பகிர்வு விடயத்தை முக்கியத்துவப்படுத்தாது பொருளாதார விருத்திக்கான விடயங்களை முன்னிலைப்படுத்தி உரையாற்றியபோதே பிரச்சனை வெடித்தது. அதிகாரப் பகிர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென தமிழரசின் மூத்த தலைவர் சம்பந்தன் இடித்துரைத்ததும், தமிழரை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாமென அழுத்திக் கூறியதும் ரணிலுக்கு படுகோபத்தை ஏற்படுத்தி விட்டதாம். ‘பேச விரும்பாவிட்டால் எழுந்து செல்லுங்கள்” என்று சம்பந்தனை விளித்து ரணில் கூறியுள்ளார்.
அண்மையில் வெளிநாடொன்றில் தம்மைச் சந்தித்த தமிழர் குழுவில் ஒருவர் ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரது ஆங்கில உச்சரிப்பை எள்ளி நகையாடுவது போன்று, ‘எனக்கு தமிழ் தெரியும், தமிழில் பேசுங்கள்” என்று நக்கல்தனமாக ரணில் கூறியது ஞாபகம் இருக்கலாம். அந்தப் பாணியிலேயே தம்மை ஜனாதிபதி என்றுகூட எண்ணாது சின்னத்தனமாக ரணில் சம்பந்தனிடம் நடந்து கொண்டாரென்பது வரலாற்றுப் பதிவில் இடம்பெறும்.
ரணில் இவ்வாறு கூறியதை ஆங்கிலத்தில் ‘பிளீஸ் கெற் அவுட்” (தயவுசெய்து வெளியே போங்கள்) என்று சொல்லலாம். இவ்வாறு சொல்லப்பட்ட பின்னரும் சம்பந்தன் பொறுமையுடன் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டார். இவ்வாறு அவர் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணமுண்டு.
இக்கூட்டத்தில் வைத்தே ரணிலுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட வேண்டுமென்பதற்காகவே அங்கிருக்க விரும்பினாரென்று அறிந்து கொள்ளலாம். ‘பொலிஸ் அதிகாரமில்லாத 13வது திருத்தத்தை நாங்கள் ஏற்கவில்லை. உங்கள் கருத்து எதற்கும் எமக்கு உடன்பாடு கிடையாது. நீங்கள் போகவிருக்கும் இடத்துக்கு இவ்விடயம் நீங்கள் போவதற்கு முன்னராகவே சென்றடையும்” என்பதே சம்பந்தன் ஏவிய அம்புகள்.
90 வயதைத் தாண்டிய அரசியல்வாதியான சம்பந்தன் பொறுமையிழந்தவராகவே இவ்வாறு கூறியது புரிகிறது. ‘எங்களை ஏமாற்றிக் கொண்டு, தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து எம்மை ஏமாற்றியவாறு, இந்தியாவின் காதிலும் பூ வைப்பதற்காக நீங்கள் அங்கு செல்வது எமக்குத் தெரியும். நீங்கள் அங்கு போவதற்கு முன்னர் உரிய முறையில் இதனை இந்தியாவுக்கு நாங்கள் அறியக் கொடுப்போம்” என்பதையே சம்பந்தன் ராஜரீக புரிபாசையில் ரணிலுக்கு நேரடியாக அடித்துக் கூறினார்.
1987 யூலையில் ராஜிவும் ஜே.ஆரும் செய்த இந்திய ஒப்பந்தமே 13வது அரசியல் திருத்தத்தின் மூலம். ஏற்கனவே பல தடவை இப்பத்தியில் குறிப்பிட்டது போன்று இது ஒரு ஒப்பந்தம் அல்ல. அமலில் உள்ள சட்டத்திருத்தம். 13க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட 18, 19, 20, 21, 22ம் திருத்தங்கள் போன்ற சட்டவலுவுடையது.
பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மாகாண சபைக்கான அதிகார பரவலாக்கலில் இடம்பெறுவதை இச்சட்டத் திருத்தம் கூறுகிறது. நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. எனவே இதனை நடைமுறைப்படுத்த மீண்டும் நாடாளுமன்ற அங்கீகாரம் பெற வேண்டியதில்லை.
இதனை மறுதலித்து, பொலிஸ் அதிகாரமில்லாத அதிகார பரவலாக்கலை வழங்க சகல கட்சிகளின் ஆதரவும், நாடாளுமன்ற மூன்றிலிரண்டு ஆதரவும் தேவை என ரணில் கூறியிருப்பது இவ்விடயத்தை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பரப்பி தமிழருக்கெதிரான ரணகளத்தை உருவாக்குவது போன்றது.
1987 ஒப்பந்தத்தின் பிரகாரம் முதலாவது மாகாண சபைத் தேர்தல் வடக்கு கிழக்கு இணைந்ததாக 1988 ல் இடம்பெற்றது. இரண்டு மாகாணங்களையும் நிரந்தரமாக இணைக்கும் கருத்துக் கணிப்பு தேர்தலை அதற்கான ஒரு வருடத்துக்குள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன நடத்தவில்லை.
1990ல் பிரேமதாச ஆட்சியில் வடகிழக்கு மாகாண சபை ஒழிக்கப்பட்டது. அதன் பின்னர் கிழக்கு மாகாணத்துக்கு தனியான தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் வடமாகாண சபைக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டு ஐந்து வருடங்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டது.
2006ல் மகிந்தவின் ஆட்சியின்போது ஜே.வி.பி.யினர் தாக்கல் செய்த வழக்கின் பிரகாரம் வடக்கும் கிழக்கும் இணைக்க முடியாதென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இரு மாகாணங்களின் இணைப்பு என்பது அகால மரணமாக்கப்பட்டது. மொத்தத்தில் கடந்த 36 ஆண்டுகளாக தமிழருக்கான மாகாண சபை நிர்வாகம் களிமண் பொம்மையாகவே அமைந்தது. தமிழர்களின் காணி பறிப்பு, தமிழர் வழிபாட்டு இடங்களின் உரிமை மறுப்பு, தமிழர் நிலங்கள் தொடர்பான நீதிமன்றங்களின் தீர்ப்பு உதாசீனம் என்பவை இனப்பாகுபாடும் இனரீதியான தாக்குதலும் அதிகரிக்க வழிவகுத்தது.
இவற்றுக்கு நிரந்தர தீர்வு காணப்படுமென பல தடவை பகிரங்கமாக உறுதியளித்த ரணிலின் ஏமாற்றம் தரும் செயற்பாடு ஒரு வருடத்துக்குள்ளேயே அம்பலமாகிவிட்டது. இந்திய பிரதமர் மோடியுடன் யூலை 21 சந்திப்பு ஒரு நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முதல் கொழும்பில் தமிழர் தரப்புடன் அவர் நடத்திய சந்திப்பும் அவரது பேச்சும் செயற்பாடும் அந்த நம்பிக்கையில் கீறலை ஏற்படுத்தியது.
மோடியுடனான சந்திப்பின் பின்னர், இலங்கை அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழர் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதை இலங்கை உறுதி செய்ய வேண்டுமென ரணிலிடம் பிரதமர் மோடி எடுத்துக் கூறியதாக புதுடில்லி சந்திப்பின் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதுள்ள நிலைமையில் இது போதுமானதாக தெரியவில்லை. கடந்த மூன்று தசாப்தமாக இந்தியா இதனைத்தான் கூறி வருகிறது. ஆனால் சிங்கள தேசத்துக்கு இது செவிடன் காது சங்கு. சிங்கள அரசியல் கட்சிகளை எதிர்த்து ரணிலினால் எதனையும் செய்ய முடியாது என்கிற பார்வை பரவலாக தோற்றம் அளிக்கிறது. இதனை இந்தியாவால் கையாள முடியும்.
1971 ஏப்ரல் ஜே.வி.பி. புரட்சியின்போது அதனை முறியடித்து பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவுக்கு பாதுகாப்பளிக்க இந்தியப்படை இலங்கையைச் சுற்றி காத்து நின்றது. 1987 யூலை ராஜிவ் – ஜே.ஆர். ஒப்பந்தத்தின்போது ஜே.ஆருக்கும் அவரது அரசாங்கத்துக்கும் பாதுகாப்பளிக்க இந்திய முப்படைகளும் கொழும்புக் கடலில் சுற்றி நின்றன.
அவ்வாறான ஒரு பாதுகாப்பை ரணிலுக்கு வழங்கி அதனூடாக அதிகாரப் பகிர்வை – 13ம் திருத்தத்தினூடாக நடைமுறைப்படுத்த இந்தியா விரும்பினால் செய்ய முடியும்.
இதனைச் செய்யாது, ஈழத்தமிழரின் தலைநகரமாக விளங்கும் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ரணிலும் மோடியும் விரிவாக ஆராய்ந்துள்ளனர் என வெளிவரும் தகவல், தனது நலனுக்காக தமிழர் பிரச்சனையை இ;ந்தியா ஒரு துரும்பாக பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
பனங்காட்டான்