யாழ்ப்பாணத்தில், ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில் நேற்று (23.07.2023) மாலை இவ் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது கறுப்பு யூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஏனையவர்களும் சுடரேற்றி அஞ்சலி செய்தனர்.
நினைவேந்தல் பதாகையில் 1983 கறுப்பு யூலை தமிழினப் படுகொலையானது இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது எனவும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் நாடு முழுவதும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் நினைவு கூருகிறோம் என்றுள்ளது.
மேலும், 1948 முதல் இன்று வரை நடைபெற்ற நடைபெறுகின்ற இன அழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஊடகப் பேச்சாளர்களாக சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி காண்டீபன் உட்பட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெல்லியடி
யூலை கலவரத்தின் 40 வது நினைவந்தல் இனவாதம் எனும் கொடும்பாவி நெல்லியடியிலும் இடம் பெற்றது.
யூலை இனக் கலவரத்தின் 40. வது நினைவேந்தல் இனவாதம் எனும் கொடும்பாவி எரிக்கப்பட்டு நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் இடம் பெற்றது.
முன்னாள் இலங்கை தமிழரசு கட்சி மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக அமரர் சிவசிதம்பரம் தூபியிலிருந்து தீப்பந்தம் ஏந்தியவாறு ஆரம்பமான நினைவேந்தல் நெல்லியடி பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் சென்றடைந்து அங்கு இனவாதம் எனும் கொடும்பாவி எரிக்கப்பட்டு, வேண்டாம் வேண்டாம் இனவாதம் வேண்டாம், தீர்வு வேண்டும் தீர்வு வேண்டும் தமிழருக்கு தீர்வு வேண்டிம் எனும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதில் இலங்கை தமிழிரசு கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் , தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.