சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே தற்போது 3 பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகளில் புறநகர் மின்சார ரயில்களும், ஒருபாதையில் விரைவு மற்றும் சரக்குரயில்களும் இயக்கப்படுகின்றன. தாம்பரம் முனையத்திலிருந்து புறப்படும் ரயில்களை இயக்குவதற்கு சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது பாதை முக்கியமானதாக இருக்கிறது. மேலும், நீண்டதூர மற்றும் சரக்கு ரயில்களை அதிகரிக்கவும் இந்த பாதை அவசியமாகிறது.
எனவே, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே ரூ.279.8 கோடியில் 4-வது புதிய பாதையின் திட்ட அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், நடப்பு பட்ஜெட்டிலும் ரூ.96.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த திட்டப்பணியை விரைவில் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான ஆய்வை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. இதில், அடையாளம் காணப்பட்ட மொத்தநிலத்தில், 250 சதுர மீட்டர் நிலம் ரிசர்வ் வங்கிக்கும், 2,875 ச.மீ. கூவம் ஆறு (கூவம் ஆற்றின் கரையோர பகுதி) பகுதி மாநில அரசுக்கும் சொந்தமானது.
இதையடுத்து,மாநில அரசு மற்றும் ரிசர்வ் வங்கிசம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ரயில்வே அதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
250 ச.மீ. நிலத்தை ரிசர்வ் வங்கிவழங்க மறுத்து வருகிறது. கூவம்கரையோர பகுதியில் உள்ள 2,875ச.மீ. நிலத்தைப் பொருத்தவரை வருடாந்திர வாடகைக்குப் பதிலாக, ஒருமுறை இறுதித் தொகையைச் செலுத்த அனுமதிக்க ரயில்வே வாரியம் கோரியது.தெற்கு ரயில்வேயின் கோரிக்கைமாநில அரசால் ஏற்கப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், திட்டப்பணி தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே மொத்தமுள்ள 4.3 கி.மீ. புதிய ரயில் பாதை திட்டத்தில், 2,000 ச.மீ. மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் வருவதால், அத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு அவசியமான இடத்தை தருவதாக,பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான 250 ச.மீ. இடத்தை கையகப்படுத்துவதில் தொடர்ந்து இழுப்பறிஏற்பட்டு உள்ளது.
மேலும், தமிழக அரசுக்கு சொந்தமான கூவம் ஆற்றுப் பகுதியில் 2,875 ச.மீ. நிலம் பெறுவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால், புதிய பாதை பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. இதற்கு, தீர்வு காணும்வகையில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றனர்.