தமிழகத்தில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்று நோய் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
பெண்களுக்குப் பரவலாக ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களைத் தடுப்பதற்காக, 30 வயதைக் கடந்த அனைத்து மகளிருக்கும் அதற்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோதனை முயற்சியாக 4 மாவட்டங்களில் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவித்திருந்தார். சில வாரங்களுக்குள் 4 மாவட்டங்களில் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: முதல்கட்டமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் விவரங்கள் திரட்டப்பட்டு, அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரிக்கை கடிதம் அளிக்கப்படும். அருகில் உள்ள சுகாதார நிலையங்களில் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் பரி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
மருத்துவப் பரிசோதனைக்கு வராதவர்களையும் கண்டறிந்து அதற்கு அடுத்த சில நாட்களுக்குள் பரிசோதனை செய்யப்படும். கர்ப்பப்பை வாய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு செவிலியர்களுக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சுகாதார நிலையத்துக்கு ஒரு செவிலியர் வீதம் அப்பயிற்சி வழங்கப்படும். மக்கள் தொகையைப் பொருத்து தேவைப்பட்டால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.