பாதிக்கப்பட்ட பெண்களை சந்திப்பதற்காக மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு சென்றார் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி

79 0

மணிப்பூர் பயணத்தை தள்ளிப்போடுமாறு விடுத்த அம்மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவல் நேற்று இம்பால் சென்றடைந்தார்.

மணிப்பூர் மாநிலத்தில் 2 பழங்குடியின பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த வீடியோ கடந்த மே 4-ம் தேதி எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்களை சந்திக்க 23-ம் தேதி மணிப்பூர் செல்வதாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவல் அறிவித்தார். இதன்படி, அவர் நேற்று இம்பால் சென்றடைந்தார். இம்பால் விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:

மணிப்பூரில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்களை சந்திக்க விரும்புவதாக அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதினேன். இதற்கு அரசு எனக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், “சட்டம் ஒழுங்கு நிலவரம் சரியில்லாத காரணத்தால் இந்த பயணத்தை தள்ளி வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது. இதுகுறித்து நன்கு யோசித்தேன். பிறகு இங்கு வர முடிவு செய்தேன்.

மணிப்பூர் மக்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். அரசியல் செய்வதற்காக வரவில்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேச மாநில அரசு என்னை அனுமதிக்க வேண்டும். என்னை தடுக்கக் கூடாது.

நான் முதல்வர் பிரேன் சிங்கை சந்திக்க உள்ளேன். இதற்காக அவரிடம் நேரம் கேட்டுள்ளேன். பின்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்களை சந்தித்து கலந்துரையாட உள்ளேன். அப்போது, சட்ட உதவி, ஆலோசனை, நிவாரணம் உள்ளிட்ட உதவிகள் ஏதேனும் தேவைப்படுகிறதா எனஅவர்களுடன் கேட்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.