எனக்கு நீதி கிடைக்கவில்லை ; ஜனாதிபதி செயலகம் முன் போராடுவேன்

92 0
யாழ். வலிகாமம் வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பிள்ளையார் குளத்தில் இடம்பெற்ற சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் மாவட்ட செயலாளர் சம்பந்தப்பட்ட உள்ளுர் திணைக்கள தலைவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக கொழும்பில் போராட்டம் ஒன்றை செய்ய உள்ளேன் என வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள கோயில் குளம் ஒன்றின் மண் அகழ்வு  மோசடி தொடர்பில் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பில்  பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்திலற்கு குறித்த விடயம் தொடர்பில் கடிதம் அனுப்பிய நிலையில் முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறித்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்தி சட்டத்தரணி  மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி உள்ளடங்கிய விசாரணை குழு ஒன்றை அமைத்தார்.

அதன்பின் அவர் வட மாகாணத்தை விட்டு சென்ற நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் என்ன நடந்தது என்பது தொடர்பில் என்னால் அறிந்து கொள்ள முடியாதுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் வலி. வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ஆகியோர் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் பல லோட் மண்ணை பணத்திற்கு விற்பனை செய்ததில் தொடர்பு பட்டிருப்பதாக நான் நம்பத்தகுந்த முறையில் அறிந்துள்ளேன்.

குறித்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபரிடம் அனுமதி கோரப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் விரைவான மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் விவகாரம் நீடித்து வரும் நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை எனக்குத் தெரிவிக்குமாறு கோரிய போதும் விசாரணை முடியாமல் தர முடியாது எனக் கூறுகிறார்கள்.

தற்போதைய வட மாகாண ஆளுநரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த நிலையில் பொறுப்புள்ள அரசு அதிகாரிகளின் மெத்தனமான அணுகுமுறையால் நான் ஏமாற்றமடைகிறேன்.

மக்கள் மற்றும் மாவட்டத்தின் பொது நலனுக்காக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் இந்த நிலைமையை இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்பதுடன், குற்றவாளிகளுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி தலையீட்டைக் கோரி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கவன ஈர்ப்புப் போராட்டத்தை செய்யவுள்ளேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.