மகா விகாரை அபிவிருத்தி திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து அனுராதபுரம் பூனிதபூமி அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மகா விகாரை அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பௌதீக திட்டமிடல் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உலக நாடுகள் இன்று தமது கடந்த கால நாகரீகத்தை முன்னிலைப்படுத்தி முன்னோக்கிச் செல்லும் போது, பெருமைமிக்க நாகரிகம் மற்றும் வரலாற்றைக் கொண்டிருப்பதாகக் கூறும் நாம் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மகாவிகாரை வளாகத்தில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப் பட்டவைகள் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி, மகாவிகாரை வளாகத்தின் எல்லைகளை துரிதமாக கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அநுராதபுரம் பொமலு விகாரையில் சனிக்கிழமை (22) பிற்பகல் நடைபெற்ற மகாவிகாரை அபிவிருத்தித் திட்டம் மற்றும் அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
கண்டி கலாவியே பிரதம சங்கநாயகத் தேரரும் அட்டமஸ்தானாதிபதியுமான கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரரின் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
உலக நாடுகள் தமது கடந்த கால நாகரீகத்தை வெளிப்படுத்தி முன்னோக்கிச் செல்கையில் பெருமைமிக்க நாகரீகத்திற்கும் வரலாற்றிற்கும் உரிமை கொண்டாடும் நாம் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மகா விகாரை வளாக எல்லையை அடையாளம் காணுதல் மற்றும் அகழ்வுப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, மகாவிகாரையின் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொல்பொருள் அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு மற்று; ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அந்த செயற்பாடுகளில் திருப்தியடைய முடியாது எனவும், குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து மகா விகாரை அபிவிருத்தித் திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனுராதபுரத்திற்கென தனித்துவமான புதிய சட்ட முறைமை யைக் கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:
நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதால் இந்தக் கலந்துரையாடலை சனிக்கிழமை தினத்தில் நடத்த நேரிட்டது தொடர்பில் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சீகிரிய மற்றும் அனுராதபுரத்தை எமது பாரம்பரிய உரிமைகளாக கருதலாம். சீகிரிய எங்கள் திறமையினால் உருவானதோடு எங்கள் நாகரீகம் அனுராதபுர நகரத்தில் தான் உள்ளது. அதில் மகாவிகாரை முதன்மை பெறுகிறது. இந்தியப் பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு திரிபீடத்தின் ஆங்கிலப் பிரதியையும் வழங்கினேன்.
இந்த மகாவிகாரை அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் அநுராதபுரம் புனித பூமியின் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அநுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தி 1947 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இதை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை.
ஆனால் இந்தியா நாலந்தா பல்கலைக்கழகத்தை 90களில் கட்டத் தொடங்கியது. இன்று நாளந்தா பல்கலைக்கழகம் ஒரு முக்கிய இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் இதற்கு பங்களித்தன. முஸ்லீம் நாடான பாகிஸ்தான் தக்ஸிலாவை அவ்வாறு உருவாக்கியது. பௌத்த நாடாக இருந்தும் எம்மால் மகாவிகாரையின் பணியை முடிக்க முடியவில்லை. அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டும் எனக் கோரி தொல்பொருள் திணைக்களம் எனக்கு கடிதம் அனுப்புகிறது. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இந்த மகாவிகாரையில் மேற்கொள்ள வேண்டிய பிரதான பணிகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு புதிய நகரம் எப்போது வேண்டுமானாலும் கட்டப்படலாம். ஆனால் இந்த மகா விகாரையயின் அகழ்வாராய்ச்சி பணியை நாம் தொடர வேண்டும்.
அனுராதபுரத்திற்கென தனித்துவமான புதிய சட்டமொன்றைத் தயாரிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல குழு ஒன்றை நியமிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தை நாம் தற்பொழுது ஆரம்பித்தாலும் 10 வருடங்களில் அதன் முன்னேற்றத்தை அடையலாம். இதனை முழுமையாக நிறைவு செய்வதற்கு 25 ஆண்டுகள் செல்லும். இந்தத் திட்டத்தின் ஊடாக இலங்கை தொல்பொருள் மையமாக மாறும்.
மேலும் சிங்கள நாகரீகம் மல்வத்து ஓயாவில் இருந்து ஆரம்பமானது. மல்வத்து ஓயா திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த மகாவிகாரை அகழ்வு பணிகள் அடுத்த இரண்டு வருடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சேனக பண்டாரநாயக்க, ரோலண்ட் சில்வா மற்றும் ஷிரான் தெரணியகல ஆகியோருடன் இணைந்து சீகிரியா திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம். அநுராதபுர நகரையும் அவ்வாறே அபிவிருத்தி செய்ய வேண்டும். நான் பெரிஸ் சென்றபோது, யுனெஸ்கோ அமைப்புடன் இது தொடர்பில் கலந்துரையாடினேன் அத்துடன் ரஜரட்ட பல்கலைக்கழகத்தையும் இதனுடன் இணைக்க முடியும்.
சுற்றுலா பயணிகள் பல நாட்கள் தங்கும் வகையில் இப்பகுதியை முன்னேற்ற வேண்டும். எனவே, இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பணிகளை ஆரம்பித்த பின்னர் அதனைத் தொடர்வதற்கு சர்வதேச ஆதரவு கிடைக்கும்.
அனுராதபுரம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம்.ஏனைய நாடுகள் தமது கடந்த காலத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றன. ஆனால் நாம் அதில் கவனம் செலுத்துவதில்லை. திம்புலாகல அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பித்திருந்தால் தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதனைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் வருவதைக் காணலாம். முதலில் அனுராதபுர வேலைகளை நிறைவு செய்வோம்.
எமது வரலாறு மற்றும் நாகரீகம் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். நமது வரலாற்றை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். நாம் எமது மரபுரிமைகளை மேம்படுத்தினால் சுற்றுலாத்துறையின் ஊடாக அதிக பலன்களை பெற முடியும்.
இங்கு ரஜரட்ட நாகரிகம் என்ற தனி கண்காட்சி கூடமொன்றை உருவாக்க எதிர்பார்க்கிறோம். பௌத்த நாகரீகம் தொடர்பில் தனியான இடமொன்று உருவாக்கப்பட வேண்டும். குசினாராவ மற்றும் சாஞ்சி என்பன எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது குறித்தும் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடினேன். பௌத்த சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்து நாடுகளில் இத்தகைய இடங்களை நிர்மாணிக்கின்றன.
மேலும், தற்போது மகாவிகாரை பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.பழைய பிரிவேனா கல்வி முறைக்கமைய இதனை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான இடத்தை அடையாளம் காண வேண்டும். இந்த நடவடிக்கைகளின் ஊடாக வரலாற்று நகரமான அனுராதபுரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றார்.
கண்டி கலாவியே பிரதம சங்கநாயகத் தேரரும் அட்டமஸ்தானாதிபதியுமான கலாநிதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர் உரையாற்றுகையில், அநுராதபுரம் என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதை அடையாளங் கண்ட தலைவர் என்ற வகையில், மகாவிகாரையை மீண்டும் நிறுவுவதற்கான உங்கள் முயற்சிகளுக்கு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் கிடைக்கும். மேலும், தேரவாத பௌத்த மையமாக உலகின் ஏனைய நாடுகளுடன் பௌத்த தத்துவத்தை பரிமாறிக்கொள்ளும் உங்கள் எதிர்பார்ப்பிற்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
1948 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவினால் வர்த்தமானி மூலம் அனுராதபுரம் புனிதபூமியாக அறிவித்தார். ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன ஜேதவனாராம மற்றும் அபயகிரிய விகாரைகளை புனரமைக்க மத்திய கலாசார நிதியத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்தார்.
சியோமோபாலி மஹா நிகாயவின் மல்வத்து பிரிவின் வடமத்திய பிராந்திய பிரதம சங்கநாயக்கரும் லங்காராம விகாராதிபதியுமான கௌரவ ரலபனாவே தம்மஜோதி தேரர் உரையாற்றுகையில்,
2001ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றுபிரதமராக பதவியேற்ற தற்போதைய ஜனாதிபதி, ஜய ஸ்ரீ மகா போதியை வழிபட வந்த போது அதமஸ்தானாதிபதி பல்லேகம சிறினிவாச தேரர் பரிந்துரை ஒன்றை அவரிடம் முன்வைத்தார்.
இரண்டாவது தங்கவேலியை புனரமைக்க வேண்டும் என்று அவர் கோரினார். அதற்கென ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்றார். அப்போதைய பிரதமரின் செயலாளர் கே. எச்.ஜே விஜேதாச தலைமையில் 2002 ஆம் ஆண்டு குழு நியமிக்கப்பட்டு அதற்கேற்ப பணிகள் ஆரம்பிக்கப்பட்டன என்றார்.
மகா விகாரை அபிவிருத்தித் திட்டத்தின் பிரகாரம் உத்தேச பணிகளை மேற்கொள்வதற்கு இரண்டு வருடங்கள் தேவைப்படும் எனவும், 555 மில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பிரதீபா சேரசிங்க இங்கு குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மகா விகாரை தொகுதியுடன் தொடர்புடைய சில விகாரைகளை பார்வையிடச் சென்றார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் ருவன்வெலி சைத்தியராமதிகாரி கலாநிதி ஈத்தலவெடுன வெவ ஞானதிலக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பி.டி. ஹேரத்,வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யு.டி. சி. ஜயலால், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கமல் புஸ்பகுமார, வடமத்திய மாகாண பிரதம செயலாளர் சந்திரசிறி பண்டார, அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜே. எம். ஜே. கே. ஜெயசுந்தர,தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்,பௌத்த விவகார ஆணையாளர் நாயகம், மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம், காணி ஆணையாளர் நாயகம், வனவளப் பாதுகாப்பு ஆணையாளர் நாயகம், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வடமத்திய மாகாண காணி ஆணையாளர் , மத்திய நுவரகம்பலாத மாகாண காணி ஆணையாளர் மற்றும் புனிதபூமி அபிவிருத்திப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.