அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை எனவும், நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளது எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இளம் தொழில் முயற்சியாளர்களின் அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றும் போது சாகல ரத்நாயக்க இதனைக் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை இளைஞர் சமூகம், நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும். ஆனால் அதனை அரசாங்கத்தின் கொள்கையாக மாற்ற முடியாது எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
நாட்டில் வலுவான உற்பத்திக் கைத்தொழில் துறையையும் அபிவிருத்தியடைந்த சுற்றுலாத்துறையையும் உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு வலுவான வேலைத்திட்டம் தேவை எனவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.