ஆசிரிய ஆலோசகர்கள் குழு ஆய்வுப்பணிகளுக்காக பாடசாலைகளுக்கு வரும்போது தமது பாட அனுபவங்களை ஏனைய ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்வதுடன், அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டுமே ஒழிய, ஆசிரியர்களை மோசமான வார்த்தைகளால் வசைபாடுவதும் நகரங்களில் அவர்களை தாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை என தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது :
எமது சங்கத்தின் உறுப்பினர் ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராக இருக்கின்றார். அவர் விஞ்ஞானமானி பட்டதாரியாவார். அவர் கற்பிக்கும் பாடசாலைக்கு 11/07/2023 அன்று சென்ற குழுவில் உள்ள ஆசிரிய ஆலோசகர் ஒருவர் தனக்கு ஏற்றவாறு பாடவேளையை மாற்றும்படியும் தனது பாடத்துக்குரிய ஆசிரியரை கற்பிக்கும்படியும் குறித்த வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியரிடம் கூறியுள்ளார்.
பாடவேளையை மாற்றும் அதிகாரம் ஆசிரிய ஆலோசகருக்கு இல்லை என்பதால் இவர் மறுக்கவே, தகாத வார்த்தைகளால் அவரை ஏசிய ஆசிரிய ஆலோசகர், நகரத்துக்கு வந்தால் தாக்குவேன் என அச்சுறுத்தியுள்ளார்.
மறுநாள் குறித்த ஆசிரியர் ஹட்டன் நகரின் மத்தியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த குறித்த ஆசிரிய ஆலோசகர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அவர் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களும் இதன்போது இருந்துள்ளனர்.
இதனால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, இது குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரிய ஆலோசகர்கள் என்றால் அஞ்சி பயப்பட வேண்டும் என்ற புதிய கலாசாரம் தற்போது உருவாகியுள்ளமை வருந்தத்தக்கது. தாக்குதலுக்குள்ளான ஆசிரியருக்கு தலை மற்றும் கண் பகுதிகளில் ஏற்கனவே உபாதைகள் இருக்கின்றன. எனவே நாம் இது குறித்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.