வங்காளதேசத்தில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி- 35 பேர் படுகாயம்

118 0

வங்காளதேசத்தில் சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாஷர் ஸ்மிருதி பரிபாஹன் என்ற பேருந்து நேற்று காலை 9 மணியளவில் பிரோஜ்பூரின் பண்டாரியாவில் இருந்து புறப்பட்டது. அப்போது 10 மணியளவில் பரிஷால்- குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டாவில் உள்ள சாலையோர குளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மூன்று குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 35 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 52 பேர் பயணிக்க கூடிய பேருந்தில் 60 பேர் பயணித்ததே விபத்துக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என உயிர் பிழைத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பேருந்தில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

17 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பரிஷால் பிரதேச ஆணையர் எம்.டி ஷவ்கத் அலி உறுதிப்படுத்தியுள்ளார்.

பலியானவர்களில் பெரும்பாலானோர் பிரோஜ்பூரின் பண்டாரியா உபாசிலா மற்றும் ஜல்கதியின் ராஜாபூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.