நவீன வசதிகளுடன் மாமன்ற கூடம்: ரிப்பன் மாளிகை வளாகத்தில் கருணாநிதி நூற்றாண்டு கட்டிடம் அமைக்க திட்டம்

109 0

நவீன வசதிகளுடன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் கருணாநிதி நூற்றாண்டு வளாகக் கட்டிடம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டி, கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்வு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் கருணாநிதி நூற்றாண்டு கட்டிடத்தை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் கவுன்சில் கூட்டம் நடத்துவதுக்கான கூடம் உள்ளது. இந்த கூடத்தில் போதியளவில் இடவசதி இல்லாத நிலை உள்ளது. 150 பேர் மட்டுமே அமரும் வசதி கொண்ட மாமன்ற கூடத்தில் 200 பேர் அமர்ந்து உள்ளனர். எனவே, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், அம்மா மாளிகை அருகில் மூலிகை உணவகம் இருந்த இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்தில் புதிய கட்டிடம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கருணாநிதி நுாற்றாண்டு நூற்றாண்டை முன்னிட்டு மாநகராட்சி கவுன்சிலர்களின் கூட்ட அரங்கு இங்கு புதிதாக கட்டப்படவுள்ளது.

நவீன வசதிகளுடன் புதிய மாமன்ற கூட்ட அரங்கு அமைக்கப்படவுள்ளது. மேலும், ஆய்வு கூட்டம் நடத்துவதற்கான வளாகம், அதிகாரிகளின் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் நூற்றாண்டு வளாகத்தை கட்ட திட்டமிட்டுள்ளோம். தற்போது, வளாகம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்பின், தமிழக அரசிடம் அனுமதி பெற்று, கருணாநிதி நுாற்றாண்டு வளாகம் அமைக்கப்படும்” என்று அவர் கூறினார்.