அத்தோடு, வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான யோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு இக்குழு சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் 16 சிவில் சமூக அமைப்புக்களை உள்ளடக்கிய வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் ஆட்சிபீடம் ஏறிய பெரும்பான்மையின சிங்கள பெளத்த சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் சிறுபான்மையின சமூகங்களுக்கு எதிராக தொடர்ந்தும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
வடக்கு,-கிழக்கு மாகாணங்களில் சிங்கள குடியேற்றங்கள், மொழியுரிமை மீறல், தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள், நிர்வாக மற்றும் அரசியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள், அரசியல் அதிகாரம் மற்றும் ஆட்சி நிர்வாகம் என்பவற்றில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டமை என்பன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை கோருவதற்கு வழிவகுத்தன.
அதன் நீட்சியாக இடம்பெற்ற முப்பது வருடகாலப் போரில் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இறுதிக்கட்ட போரின்போது யுத்த சூனிய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலங்கை அரசாங்கம் கொத்தணிக் குண்டுகளையும் போசுபராஸ் குண்டுகளையும் பயன்படுத்தியதுடன் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களிலும் ஈடுபட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மை மற்றும் நீதி, ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்புடனான நியாயமான உண்மையை கண்டறியும் பொறிமுறை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவரல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது.
குறிப்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் ஸ்தாபித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அதிகாரங்களை மாத்திரமே கொண்டிருந்ததுடன் அதனூடாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.
அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, பெளத்தமயமாக்கல், கலாசார உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன இன்னமும் தொடர்கின்றன. இம்மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்புவோர் கைதுசெய்யப்படுவதுடன் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
எனவே, நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் எவ்வித முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ஆகவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான யோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் இணை அனுசரணை நாடுகள், ஜப்பான், தென்னாபிரிக்கா மற்றும் சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர் ஆகிய தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.