கூடங்குளம் போராட்ட மோதல் வழக்கில் பெண்கள் உள்பட 18 பேருக்கு 7 ஆண்டு சிறை

71 0

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்தவர் இளங்கோ(வயது 50). மீனவர். கடந்த 2010-ம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பொதுமக்கள் இடிந்தகரையில் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக அப்பகுதி மீனவர்கள் தங்களது மீன்பிடி தொழிலில் கிடைக்கும் வருவாயில் 10-ல் ஒரு பங்கை போராட்ட குழுவுக்கு கொடுத்தனர்.

ஆனால் இளங்கோ, போராட்ட குழுவுக்கு பணம் கொடுக்காமலும், போராட்டத்தில் பங்கேற்காமலும் இருந்துள்ளார். இதனால் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் சுப.உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் ஆகியோர் இளங்கோவை போராட்டத்தில் பங்கேற்க அழைத்தனர். ஆனால், அவர் வராததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்குமாறு கூறப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு இளங்கோவை அந்த பகுதியை சேர்ந்த ஜோதி, ரோசாரி, லூர்து மிக்கேல், போர்ஜின், அசாருதீன், ராபர்ட், சேகர், பிரவீன், கவுதம் மற்றும் ரமேஷ், கவுசானல், சீலன், சகாயம், ஞானப்பிரகாசி, ஆஷா, சிங், சூர்யா ரவி, ராணி ஆகிய 19 பேர் அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினர். இதில் இளங்கோவின் உறவினரான பிரைட்டனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் சுப.உதயகுமார் உள்ளிட்ட 22 பேர் மீது 2 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் விசாரணை, வள்ளியூர் சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி பர்ஷாத் பேகம் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், கூடங்குளம் அணு உலை போராட்ட எதிர்ப்பாளர்கள் சுப.உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து அவர்கள் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ராணி இறந்து விட்டார்.

மீதமுள்ள 4 பெண்கள் உள்பட 18 பேருக்கு சதி திட்டம் தீட்டியதற்காக 2 ஆண்டுகளும், கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.1,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.