13 ஆவது திருத்தத்தை மீறும் உரிமை ஜனாதிபதிக்கு கிடையாது – செல்வம் அடைக்கலநாதன்

72 0
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் சட்ட ரீதியாக அரசியலமைப்பில் உள்ள ஒரு விசேட திருத்தம். இந்த அரசியல் சாசனத்தை மீற  ஜனாதிபதிக்கு கூட தார்மீக உரிமை  இல்லை.

13 ஆவது அரசியலமைப்பு திருத்த விடயத்தில்  இந்தியா தொடர்புப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் அது தொடர்பில்  இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என  வலியுறுத்துகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்தியாவுக்கு செல்ல முன்னர் எம்மை அழைத்து பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தரமுடியாது என்று கூறினார்.

அவருக்கு ஒன்றை தெளிவாக கூற விரும்புகின்றோம். நாங்கள் கோரும் தீர்வு சமஸ்டி அடிப்படையிலானது. அதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.

அரசியலமைப்பின்  13ஆவது திருத்தம்  சட்ட ரீதியாக அரசியலமைப்பில் உள்ள ஒரு விசேட திருத்தம். இந்த அரசியல் சாசனத்தை மீற ஜனாதிபதிக்கு கூட தார்மீக உரிமை  இல்லை.

13 ஆவது அரசியலமைப்பு திருத்த விடயத்தில்  இந்தியா தொடர்புப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலேயே அது தொடர்பில் ஒரு அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்க வேண்டுமென நாம் கோரி வருகின்றோம்.

இலங்கை அரசு உட்பட இலங்கை ஜனாதிபதி இந்த அரசியல் சாசனத்தை மீறுகின்ற பாதக செயலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

சட்டத்தை   மீறுகின்ற தலைவர்களாக இருக்கின்ற  நிலையில் ஏனைய சாதாரண மக்கள்  சட்டத்தை  எப்படி மதிப்பார்கள் எனக் குறிப்பிட்டார்.