ராஜபக்ஷ, கப்ரால் வகுப்பில் பகுதியளவு கல்வி கற்றவர்கள் ரணில் வகுப்பில் பட்டம் பெற முயற்சி

83 0

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொருளாதார மீட்சி தொடர்பில் எமக்கு பாடம் புகட்டுகிறார்கள். ராஜபக்ஷர்களின் வகுப்பில் பகுதியளவு அரசியலையும், கப்ராலின் வகுப்பில் பகுதியளவு பொருளாதாரத்தை கற்றவர்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் வகுப்பில் பட்டம் பெற முயற்சிக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தின் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நடுத்தர மக்கள் பொருளாதார பாதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு திருத்தங்களுடன் ஆதரவு வழங்கினோம்.

மத்திய வங்கி சட்டமூலத்துக்கும் ஆதரவு வழங்கினோம்.பாரம்பரியமான எதிர்க்கட்சிகளை போல் இல்லாமல் மாறுப்பட்ட வகையில் செயற்படுகிறோம்.பாராளுமன்றத்தில்  மிளகாய் தூள்  வீசி,தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் செயற்பட்டதை போல் நாங்கள் செயற்பட போவதில்லை.

தேசிய கடன் மறுசீரமைப்பால் நடுத்தர மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.  அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் இலங்கை வங்கி,மக்கள் வங்கி ஆகிய இரு பிரதான அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

ஆகவே வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை முறையாக மீள பெற்றுக்கொள்ள நிதியமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

நுண்கடன் நிதி திட்டம் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.வறுமை நிலையில் உள்ளவர்களை இலக்காக கொண்டு நுண்கடன் நிறுவனங்கள் செயற்படுகின்றன.

கடனை  திருப்பி செலுத்த முடியாதவர்களிடம் நுண்கடன் நிறுவனங்கள் பாலியல் இலஞ்சம் கோருகிறது.இந்த பிரச்சினையை 2018 ஆம் ஆண்டு நாங்கள் குறிப்பிட்டோம்.துரதிஷ்டவசமாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.நுண்கடன் திட்ட நிறுவனங்கள் முறையற்ற வகையில் செயற்படுவதை  துரிதப்படுத்திக் கொண்டது.

நுண்கடன் திட்டம் தொடர்பில் மத்திய வங்கி விசேட கவனம் செலுத்த வேண்டும்.மத்திய வங்கியின் சுயாதீன தன்மை கேள்விக்குள்ளாகும் போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரதன்மையை இழக்கும் இதுவே காலம் காலமாக இடம்பெற்றுள்ளது.ஆகவே இந்நிலையை புதிய சட்டத்தின் ஊடாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.