விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

301 0
பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மீள் குடியேற்ற அமைச்சருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் போராட்டத்தின் பின்னர் அண்மையில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு, பரவிப்பாஞ்சான் ஆகிய பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன.
எனினும் குறித்த காணிகளில் இருந்த மக்களின் வீடுகள், கிணறுகள், மலசலகூடங்கள் பாவனைக்குற்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக மக்கள் மீள் குடியமர்வதற்கு போதிய வசதிகள் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
எனவே இந்த விடையம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.