இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நேற்றையதினம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்டெனேக்ரோ, பிரித்தானியா, வடக்கு அயர்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆகிய நாடுகளின் பிரதான அனுசரணையுடன் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புகூறல்கள் மற்றும் மறுசீரமைப்பு என்பவற்றை முன்னேற்றுதல் என்ற தலைப்பில் குறித்த பிரேரணை அமைந்துள்ளது.
இலங்கையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளையும், ஏனைய நல்லிணக்கம் சார்ந்த செயற்பாடுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடைமுறையாக்கலின் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கைப் படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கையின் மனித உரிமைகள், உண்மை மற்றும் நீதி, மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களுக்கான தொழில்நுட்ப உதவிகளை மனித உரிமைகள் பேரவை வழங்க வேண்டும்.
மேலும் அரசாங்கம் உறுதியளித்துள்ள விடயங்களை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை வரைவு தொடர்பான திருத்த யோசனைகளை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் முன்வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.