கோவை மத்திய சிறை, புதியதாக சிறை அமைக்கப்பட உள்ள இடம் ஆகிய இடங்களில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று ஆய்வு செய்தார்.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் கோவை மத்திய சிறை அமைந்துள்ளது. சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் கைதிகள் அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன. கோவை மத்திய சிறையை இடமாற்றிவிட்டு, அங்கு செம்மொழிப்பூங்கா அமைக்கப்படும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து மத்திய சிறைக்கு ஏற்ற 120 ஏக்கர் இடம் இருந்தால் தெரிவிக்குமாறு கோவை மத்திய சிறைத்துறை நிர்வாகத்தால், மாவட்ட வருவாய்த்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. காரமடை அருகே பிளிச்சியில் சுமார் 100 ஏக்கர் இடம் உள்ளதும், அங்கு சிறைச்சாலை அமைக்க முடியும் என்றும் வருவாய்த்துறையினரால், சிறைத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகளும் பிளிச்சி பகுதியில் சென்று ஆய்வு நடத்தினர். அதன் பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பிளிச்சியில் சிறைச்சாலை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 13) கோவைக்கு வந்த உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, சிறைச்சாலை அமைக்கப்பட உள்ள பிளிச்சி பகுதியில் முதலில் ஆய்வு செய்தார். பின்னர் கோவை மத்திய சிறையில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மத்திய சிறையில் ஏறத்தாழ 2 மணி நேரத்துக்கும் மேலாக அவர் ஆய்வு செய்தார். கோவை மத்திய சிறையில் உள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோவை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செம்மொழி பூங்கா அமைய உள்ளதால், சிறை வளாகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான பரிந்துரையை அனுப்பி இருந்தோம். சிறைச்சாலை அமைக்கப்பட உள்ள பிளிச்சி பகுதியிலும், மத்திய சிறையிலும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். சிறைச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது இறுதியான பின்னரே, எவ்வளவு ஏக்கரில் இடம் தேவை எனத் தெரியவரும். அரசு நிலமும் உள்ளது. தேவைப்பட்டால் தனியார் நிலமும் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன சிறைச்சாலை கட்டுவதற்கான ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.