அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 17 வயது நிரம்பிய தாய் ஒருவர் தன் கைக்குழந்தைக்கு பால் பவுடருடன் போதைப் பொருளை சேர்த்துக் கொடுத்ததால் அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமிக்கு வயது 17 என்பதால் அவரின் அடையாளங்களை வெளியிடாத போலீஸ் தரப்பு நடந்த சம்பவத்தை மட்டும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளது.
அதன்படி, கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதியன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காலஹான் எனும் பகுதியிலிருந்த அந்தச் சிறுமியின் வீட்டுக்குப் போலீஸார் சென்றபோது குழந்தை பேச்சுமூச்சு இல்லாமல் இருந்துள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றுள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் ஃபென்டானில் என்று போதை மருந்து இருந்தது தெரியவந்தது. அது குறித்து மருத்துவ அறிக்கையில், குழந்தையின் உடலில் 10 பெரியவர்களைக் கொல்லும் அளவிலான பென்டானில் இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.
அந்தக் குழந்தையின் 17 வயது தாயிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதலில் அந்தச் சிறுமி அது பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார். அடுத்தடுத்த விசாரணைகளில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கைக்குழந்தையை தன்னால் பராமரிக்க இயலவில்லை என்றும் அதனால் குழந்தைக்கு பாலுடன் கொஞ்சம் போதைப் பொருள் கலந்ததாகவும் குழந்தை தூங்கினால் தானும் சிறிது நேரம் தூங்க இயலும் என்பதால் அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அது கொக்கைன் என்றே தான் நினைத்ததாகவும் ஃபென்டானில் என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். சிறுமியின் கொடூரமான செயலைக் கண்டும், புத்தி பேதலித்துபோல் அச்சிறுமி இருப்பதும் வேதனையளிப்பதாகப் போலீஸார் கூறினர். அந்தச் சிறுமியின் மீது கொலை மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த குற்றங்களுக்கான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுமியை போலீஸார் கைது செய்தபோது அவர் தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக போலீஸாரிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் பதின்ம வயதினர் பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவில் ஈடுபடுவது இயல்பானதாகவே இருக்கின்றது. ஆனால் அதனால் ஏற்படும் தேவையற்ற கருத்தரித்தல், அடோலசென்ட் தாய்மார்கள் உருவாகுதல் சவாலாகவே இருக்கின்றது. உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகளவு டீன் ஏன் பிரெக்னன்ஸி ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதுவும் அர்கான்ஸாஸ், மிஸிஸிப்பி, லூசியானா, ஓக்லஹாமா, அலபாமா மாகானங்களில் இது அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது. 20 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் கருத்தரித்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளும்போது குழந்தை பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.