20 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்

79 0

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  ஜூலை மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் கடந்த 07 ஆம் திகதி சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாரளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பாராளுமன்றம்  ஜூலை 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கூடவுள்ளது. அதற்கமைய 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை  9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சுங்கக் கட்டளைச் சட்டத்தின்  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மூன்று ஒழுங்குவிதிகள்  விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், 1.30 மணி முதல் மாலை  5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

மறுநாள்  19 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் என்பவற்றின் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன்  20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதனையடுத்து, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.

21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் . 5.00 மணி வரை வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டதாவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.