1984 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிகின்ற வரைக்கும் சிறிலங்கா இராணுவத்தினருடைய முழுமையான ஆக்கிரமிப்பு பிரதேசமாக இருந்த கொக்குத்தொடுவாய் பகுதியிலே பாரிய மனிதப் புதைகுழி கண்டெடுக்கப்பட்டதென்பது தமிழ் மக்கள் மத்தியிலேயே பாரிய அச்சத்தை – பதட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்தொடர்பில் வியாழக்கிழமை (13) விசேட கலந்துரையாடலில் பற்கேற்ற பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிகையில்
யுத்தம் முடிந்த காலப்பகுதியில் வட்டுவாகலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்த பெருமளவானவர்கள் இராணுவத்தினரின் பேருந்துகளில் ஏற்றப்பட்டு இவ்வாறான பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்ற செய்தி அந்த நாளில் இருந்தே வெளிவந்துகொண்டிருந்தது.
அவ்வாறான நிலைமையில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பாரிய பதட்டத்தை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அரசியல் தரப்புகள் எல்லாம் இந்த அகழ்வானது சர்வதேச நியமங்களுக்கு அமைய சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வுப் பணிகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எங்களை பொறுத்தவரையில் உள்நாட்டிலே இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற அகழ்வுகள் மூலமாக தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பது தான் எங்களுடைய அனுபவமாக இருக்கிறது.அந்த வகையிலே, எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக வலியுறுத்தி இருக்கின்றார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் அந்தப் பகுதி ஒப்படைக்கப்பட்டு அவர்களுடைய மேற்பார்வையிலேயே அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தி இருக்கின்றார்” – என்றார்.