கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெற்று குறுவை சாகுபடி பயிர்களை காப்பாற்ற வேண்டும்

85 0

கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை பெற்று குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக அரசை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத் துறை அமைச்சருமான சிவகுமார் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி தெரிவித்து வருகிறார்.

தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்துக்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை முறையாக பங்கீட்டின்படி கர்நாடகா திறந்துவிடவில்லை.

இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி கேள்விக் குறியாகிஉள்ளது. கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் காவிரி நீர் மற்றும் மேகேதாட்டு அணை பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

கர்நாடகாவின் போக்கை கண்டித்தும், தமிழக உரிமையை நிலைநாட்டவும் தமிழக அரசு போராடி இருக்க வேண்டும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாது ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். காவிரி நீரை பெற்றுத் தந்துதமிழகத்தில் குறுவை சாகுபடி பயிர்களைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.