காணாமல் போன ஜேர்மன் தொழிலதிபரின் உடல் பாகங்கள் தாய்லாந்தில் உள்ள வீடு ஒன்றின் குளிர்சாத பெட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 62 வயது ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹான்ஸ்-பீட்டர் மேக்(Hans-Peter Mack) கடந்த ஜூலை 4ம் திகதி தொழில் தொடர்பான முக்கிய கூட்டத்திற்கு சென்ற பிறகு இருந்து வீட்டிற்கு திரும்பவில்லை என தாய்லாந்து சேர்ந்த அவரது 24 வயது மனைவி பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அவர் கடைசியாக பாட்டாயா பகுதியில் அவருடைய பென்ஸ் காரில் செல்வது சிலர் பார்த்துள்ளனர், ஹான்ஸ்-பீட்டர் மேக் காணாமல் போனதை தொடர்ந்து அவர் தொடர்பான தகவல் வழங்குபவர்களுக்கு 3 மில்லியன் பாட் வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்து இருந்தனர்.
தொழிலதிபர் ஹான்ஸ்-பீட்டர் மேக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்து தன்னுடைய தாய்லாந்து மனைவியுடன் இணைந்து பட்டாயா-வில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிழக்கு தாய்லாந்து பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த குளிர் உறைவிப்பானில் இருந்து காணாமல் போன 62 வயது ஜேர்மன் தொழிலதிபர் ஹான்ஸ்-பீட்டர் மேக்-கின் உடல் பாகங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நோங் ப்ரூ நகர தலைமை காவலர் Tawee Kudthalaeng, திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் ஹான்ஸ்-பீட்டர் மேக் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பீட்டர் மேக் உடல் கண்டுபிடிக்கப்பட்ட வீடு அவருடைய ஜேர்மன் நண்பர் ஒருவரால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது, மேக் உடல் அடைக்கப்பட்டு இருந்த உறைவிப்பான் கருப்பு நிற லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்காணிப்பு கமெராவில் பொலிஸார் கண்டுபிடித்ததை தொடர்ந்து இந்த உண்மை வெளிவந்துள்ளது.
ஹான்ஸ்-பீட்டர் மேக் கடத்தப்பட்டது மற்றும் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தற்போது பொலிஸார் 3 வெளிநாட்டவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.