தமிழ் தாய்மார்களாகிய எமக்கு கூடிய விரைவில் அரசியல் தீர்வு வேண்டும்

137 0

இந்தியாவிடம் 13 திருத்தங்களைக் கேட்கும் தமிழர்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பைக் கேட்கவில்லை? நாம் தீண்டத்தகாத தமிழர்களா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் 2332வது நாளாக இன்று (11.07.2023) சுழற்சி முறை போராட்டத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தாய்மார்களாகிய எமக்கு கூடிய விரைவில் அரசியல் தீர்வு வேண்டும். தமிழர்களின் இறையாண்மை கடந்த காலத்தில் வலிநது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை கண்டறிய உதவும், தற்போதைய தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்.

13வது திருத்தச் சட்டத்தை முன்வைக்கும் இந்த அரசியல் வாதிகள், இலங்கையில் இந்திய பாணி அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த ஒருபோதும் குரல் கொடுக்காதது ஆச்சரியமாக உள்ளது.

இதற்குக் காரணம், ஒருவேளை அவர்கள் இந்திய அரசியல்வாதிகளை விடத் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கலாம் அல்லது தமிழர்களாகிய நாம் தீண்டத்தகாதவர்கள் என்று நினைக்கலாம்.

கடந்த 36 ஆண்டுகளாக 13வது திருத்தம் தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை நாம் அறிவோம்.

1987ல் 13வது திருத்தம் வந்ததில் இருந்து பல வீரத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,46,000 அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

50,000 தமிழ் குழந்தைகள் அனாதைகளானார்கள். 90,000 தமிழர்கள் விதவைகள் ஆனார்கள். 35,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

பல தமிழ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பின்னர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த 13வது திருத்தம் பற்றிய பேச்சு இன்னும் தமிழர்களுக்கு சேதம் விளைவித்து வருகிறது. தமிழர்களின் கோவில்கள் சிங்கள பௌத்த சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன.

13வது திருத்தம் கேரள அரசியல்வாதிகளான நாராயணன் மற்றும் சிவசங்கர் மேனன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டது. சேர ஆட்சியாளர்களை சோழர்கள் தோற்கடித்ததால் கேரள அரசியல்வாதிகள் தமிழகத்தில் தமிழர்கள் மீது இன்னும் கோபத்தில் உள்ளனர்.

உலகில் பெரும்பான்மை அடக்கு முறையாளர்களின் கீழ் நில அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் கொண்ட நாடு இல்லை.இந்த 13வது திருத்தம் ஒரு தனித்துவமான கருத்தாகும். இது தமிழர்களை முட்டாளாக்கவே உருவாக்கப்பட்டது.

இந்த ஒற்றையாட்சி நாட்டில் சுதந்திரம் பெற்று கடந்த 75 வருடங்களாக தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.

வெறுமனே, ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அரசியல் தீர்வும் இயங்காது. குறிப்பாக சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது எந்த அரசியல்வாதியும் இதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் இனி மேலும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சிங்களவர்கள் இந்த முழுத் தீவிழும் பௌத்த மயமாக்கலையும் சிங்கள மயமாக்கலையும் விரும்புகிறார்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை முழு உலகிற்கும் சிங்கள சிந்தனையை காட்டுகிறது. எனவே, தமிழர்களின் அரசியல், நிலம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தமிழ் இறையாண்மையே சிறந்த தீர்வாகும்.

அதனால் தான் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாங்கள் கோருகிறோம் என தெரிவித்துள்ளனர்.