கிளிநொச்சியில் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி

157 0

கிளிநொச்சி கண்டாவளை கமநல சேவை நிலையத்தின் நீர்வரி பங்குகள் பயிர் செய்கை முறையற்ற விதத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது கிளிநொச்சி கமநல சேவை நிலையம் கண்டாவளை கமநல சேவை நிலையம் ஆகியவற்றில் இருந்து நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்படி விடயங்கள் அம்பலமாகியுள்ளன.

கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் சின்னக்காடு கமக்கார அமைப்பினால் சமர்ப்பிக்கப்ட்டுள்ள 27 பக்கங்களை கொண்ட சிறுபோக உரமானியப்பட்டியல் 48 பக்கங்கள் கொண்ட மகிழங்காடு சிறுபோக உரமானிய பட்டியல் 45 பக்கங்களை கொண்ட பன்னங்கண்டி உரமானிய பட்டியல்களின்படி மேற்படி விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இரணைமடுக்குளத்தின் கீழான பயிர்செய்கை கூட்டத்தீர்மானங்களுக்கு மாறாக கமநல சேவை நிலையங்களில் பங்கு மாற்றம் செய்யப்படாமல் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவை முறையற்ற விதத்தில் அதிகூடிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதனால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதாவது தற்போது நடைமுறையிலுள்ள நீர்வரி பதிவேட்டின் படி 3461 முதல் 5644 வரையான இலக்கங்களை கொண்ட கண்டாவளை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட பங்குகளில் இருந்தே குறித்த 143 விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 271.2 ஏக்கர் வரையான நீர்வரி பங்குகள் பயிர் செய்கை கூட்டத்தீர்மானங்களுக்கு மாறாக முறையற்ற விதத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை புலிங்கதேவன் முறிப்பு பகுதியிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான 4712 நீர்வரி இலக்கத்தையுடைய 9.2 ஏக்கர் சிறுபோக பங்கு கமநல சேவை நிலையத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை அவருக்கு வழங்காது இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தின் பொருளாளரால் இரகசியமான முறையில் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீள்ள சின்னக்காடு மகிழங்காடு மற்றும் இராமநாதபுரம் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள டீ-4 வட்டக்கச்சி ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயினால் உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் இதுவரை நீதியான விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த மோசடிகளின் பின்னால் மாவட்டத்தின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் கமநல சேவை நிலையத்தின் உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகள் பலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கையில் இவ்வாண்டு 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் மாவட்ட அரச அதிபர் தலைமையில் எடுக்கப்பட்டு பயிர்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சுமார் 1700 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் மேலதிக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறை சார் அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.