அச்சு அசலான இளம்பெண் வடிவத்தில் தோற்றமளிக்கும் அந்த செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தலைநகர் புவனேஸ்வரில் இதற்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. தொலைக்காட்சி ஊடகத் துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஓடிவி நிறுவனம், அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டும், காலத்தின் தேவைக்கு ஏற்பவும் இந்த மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.
மெய்நிகர் செயற்கை செய்தி தொகுப்பாளினி லிசாவை அறிமுகம் செய்து வைத்த பிறகு அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜகி மங்கத் பாண்டா கருத்து தெரிவிக்கையில்,
“ஒரு காலத்தில் கணினி என்பது ஆச்சரியமான விஷயமாக இருந்தது. ஆனால், காலம் மாறி, தற்போது இணையத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். எனவே, காலப்போக்கில், தொலைக்காட்சி பத்திரிகையில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள எங்களது ஓடிவி தொலைக்காட்சியானது, ஒடிசாவின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளரை அறிமுகப்படுத்தி மற்றொரு மைல்கல்லை அமைத்துள்ளது.
“தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஏஐயின் (AI ) பயன்பாடு இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதனால்தான், ஏஐ செய்தி தொகுப்பாளர் லிசா பல புதிய மைல்கற்களை உருவாக்கத் தயாராகிவிட்டார். இந்த தொலைக்காட்சியின் மண்டல ஒளிபரப்பு அரங்கில் லிசா முதல் ஏஐயின் தொகுப்பாளர் மட்டுமின்றி முதல் ஒடியா செய்தி தொகுப்பாளர் ஆவார்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து தெரிவிக்கையில் அவர்,
“1997ல் ஒடிசா டெலிவிஷன் லிமிடெட் தொடங்குவதற்கான எங்கள் பயணத்தை நாங்கள் தொடங்கினோம். அந்த நேரத்தில், எங்கள் நோக்கம் பற்றி நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம். பல சகாப்தங்கள் கடந்துவிட்டன. ஆனால் ஓடிவியில் உள்ள எங்கள் கொள்கைகளின் படி, நாங்கள் இன்னும் செயல்படுத்தப்பட வேண்டிய முன்னெடுப்புகளை தொடர்ந்து மனதில் வைத்து செயல்பட்டு வருகிறோம். ஒடிசாவில் கடந்த 26 ஆண்டுகளாக எங்களது ஓடிவி நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது” எனவும் பாண்டா தெரிவித்துள்ளார்.