தமிழகத்தில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்தியபடி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அது, பொம்மை துப்பாக்கி என தெரிய வந்ததால் பொலிஸார் நிம்மதி அடைந்தனர்.
இந்தியாவின் தமிழகத்தில் தற்போது தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சின்ன வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சேலம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஒரு தட்டில் தக்காளிகளை வைத்து, இருபுறமும் துப்பாக்கி ஏந்திய நபருடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். இதைப் பார்த்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
அலுவலக நுழைவு வாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் அவர்களிடம் விசாரணை செய்தபோது, தக்காளி விலையை கட்டுப்படுத்தக் கோரியும், அனைவரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் பொம்மை துப்பாக்கியுடன் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.
இதனால் நிம்மதி அடைந்த காவல்துறையினர், துப்பாக்கி எடுத்து வந்தவர்களை உள்ளே நுழைய அனுமதி மறுத்து, தக்காளியை எடுத்து வந்தவரை மட்டும் அனுப்பி புகார் கொடுக்கச் செய்தனர். தொடர்ந்து அவர், தக்காளி விலையை கட்டுப்படுத்தக் கோரிய மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு போராட்டங்கள் நடந்துவரும் சூழ்நிலையில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரின் இந்த நூதன மனு கொடுக்கும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.