பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து நாட்டின் மிகமுக்கிய அடிப்படைக்கட்டமைப்பான நீதிமன்றத்தின் மீதான மிகமோசமான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதிமன்றத்தை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிப்பதென்பது துடிப்பான ஜனநாயகத்தின் நிலைத்திருப்புக்கு அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய சரத் வீரசேகர எம்.பி, ‘குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது.
தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள, பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக்கொள்ளவேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகின்றார்கள்.
ஆகவே பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணையவேண்டும்’ என்று அழைப்புவிடுத்திருந்தார். அவரது கருத்து பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் தோற்றுவித்திருந்த பின்னணியிலேயே, சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றின் ஊடாக மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதுடன் நீதிமன்றத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றோம்.
இருப்பினும் அண்மையகாலங்களில் அதிகரித்துவரும் நீதிமன்றத்தின்மீது அழுத்தம் பிரயோகிக்கும் போக்கு, மேற்கூறப்பட்ட முக்கிய கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதில் அச்சறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
அண்மையகாலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமக்குரிய பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் கருத்து வெளியிடும் போக்கு மேலோங்கிவருவது குறித்து நாம் மிகுந்த கரிசனையடைகின்றோம்.
குறிப்பாகக் கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்தை நாட்டின் மிகமுக்கிய அடிப்படைக்கட்டமைப்பான நீதிமன்றத்தின் மீதான மிகமோசமான தாக்குதலாகவே நாம் கருதுகின்றோம்.
நீதிமன்றக்கட்டமைப்பை எவ்வித வெளியக அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும், தலையீடுகளுமின்றி சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிப்பதென்பது துடிப்பான ஜனநாயகத்தின் நிலைத்திருப்புக்கு இன்றியமையாதது என்பதே எமது நிலைப்பாடாகும். நீதிமன்ற சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைக்கோட்பாடுகளும் அதனையே பிரதிபலிக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் நீதிமன்றத்தின் சுதந்திரத்துக்கு இடமளிப்பதும், மதிப்பளிப்பதும் அரசாங்கம் மற்றும் எதிர்த்தரப்பு ஆகியவற்றின் கடமை என்பதுடன் நீதிமன்ற செயற்பாடுகள் மீதான எந்தவொரு தலையீடும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.