இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கொழும்பில் செவ்வாய்க்கிழமை (11) சந்தித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பாக வெளிவிவகாரச் செயலாளர் வினய் மோகன் குவத்ராவுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.
பரஸ்பர நன்மைக்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (10) இரவு இலங்கை வந்தடைந்தார்.
இதேவேளை, இந்திய வெளிவிவகார செயலாளர் , இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட குழுவினர் இலங்கை வெளிவிவகார செயலாளரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.