இலங்கையின் வங்குரோத்து நிலை குறித்து ஆராய சஜித் தனது சொந்த தெரிவுக்குழுவை நியமிப்பார் -திஸ்ஸ அத்தநாயக்க

73 0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை எப்படி வங்குரோத்து நிலைக்குச் சென்றது என்பதை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் தகவல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேமதாச சுயமாக குழுவொன்றை நியமிப்பதோடு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்தும் தகவல்களைப் பெறுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் நியாயத்தன்மை குறித்து வினவியபோது, ​​எந்த நேரத்திலும் எந்தவொரு அரச அதிகாரியையும் விசாரணைக்கு அழைக்கலாம் என சபாநாயகர் வழங்கிய தீர்ப்பை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் அவ்வாறு செய்வார் என அத்தநாயக்க தெரிவித்தார்.“எதிர்க்கட்சித் தலைவர் எந்த நேரத்திலும் எந்த அரச அதிகாரியையும் அழைத்து விசாரணை நடத்தலாம் என சபாநாயகர் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளார். எனவே பிரேமதாச ஒரு குழுவை நியமிப்பது சட்டபூர்வமானதாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவரால் நியமிக்கப்படும் குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பு எம்.பி.க்கள் இருப்பார்கள்”“இலங்கையின் திவால்தன்மைக்கான காரணங்களைக் கண்டறிய சபாநாயகர் நியமித்த தெரிவுக்குழுவில் இருந்து அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களும் அதன் தலைவரும் நாட்டை திவாலான நிலைக்கு கொண்டு சென்ற அரசாங்கத்தின் உறுப்பினர்களாக இருப்பதால் இது எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.